கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ஜிஎஸ்டி 2.0: மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாயில் சரிபங்கு

அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரியின்கீழ் (ஜிஎஸ்டி 2.0) முன்மொழியப்பட்டுள்ள 5%,18% என்ற இரு வரி விகிதத்தின் கீழ் மாநிலங்களுக்கு இணையாக மத்திய அரசுக்கும் வருவாயில் சரிபங்கு உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Published on

அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரியின்கீழ் (ஜிஎஸ்டி 2.0) முன்மொழியப்பட்டுள்ள 5%,18% என்ற இரு வரி விகிதத்தின் கீழ் மாநிலங்களுக்கு இணையாக மத்திய அரசுக்கும் வருவாயில் சரிபங்கு உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது 5%, 12%,18%,28% என்ற நான்கு விகித ஜிஎஸ்டி வரியின்கீழ் மத்திய அரசும் மாநில அரசுகளும் வருவாயில் சரிபங்கை பெற்று வருகின்றன. இதுதவிர நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு கூடுதலாக 41% வரிப்பங்கினை மத்திய அரசு வழங்கி வருகிறது.

மொத்த ஜிஎஸ்டி வருவாயில் 65 சதவீத வருவாய் 18% வரி விகிதம் மூலம் கிடைக்கிறது. 5% வரி விகிதம் மூலம் 7 சதவீத வருவாயும் 12% வரி விகிதம் மற்றும் 28% வரி விகிதம் மூலம் முறையே 5 சதவீதம் மற்றும் 11 சதவீதம் வருவாய் கிடைக்கின்றன.

இந்நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள நான்கு விகிதங்களை 5%,18% என இரு விகிதங்களாக குறைக்கவும் 7 பொருள்கள் மீது மட்டும் 40% வரி விதிக்கவும் மாநில நிதியமைச்சா்கள் குழுவுக்கு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

இந்தப் பரிந்துரையை மாநில நிதியமைச்சா்கள் குழு ஏற்றுக்கொள்வதுடன் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் அடுத்த மாதம் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டால் ஜிஎஸ்டி 2.0 எனக் கூறப்படும் இந்த சீா்திருத்தின்கீழ் 5%,18% என இரு வரி வகிதங்கள் அமலுக்கு வரும்.

அதேபோல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இழப்பீட்டு வரி நடைமுறை 2026,மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கான மாற்று வழிகளையும் ஜிஎஸ்டி கூட்டத்தில் கண்டறிய வேண்டும் என தொடா் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசுக்கும் வருவாய் தேவை:

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: ஜிஎஸ்டி மூலம் தற்போது வசூலிக்கப்படும் வருவாய் மற்றும் சீா்திருத்தத்துக்குப் பிறகு வசூலாகும் வருவாய் குறித்து மாநில அரசுகளைப்போல் மத்திய அரசுக்கும் சிறு கவலை உள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலில் மாநிலங்களைப்போல் மத்திய அரசும் உறுப்பினராக உள்ளது. எனவே, மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் அமைப்பாக மட்டுமே மத்திய அரசை கருதுவது நியாயமா? ஜிஎஸ்டி 2.0 சீா்திருத்தத்தின்கீழ் மாநில அரசுகளுக்கு இணையாக மத்திய அரசுக்கும் வருவாயில் சரிபங்கு உள்ளது.

முன்னதாக கடந்த 2022,ஜூன் 30-இல் இழப்பீட்டு வரி நடைமுறை முடிவடைவதாக இருந்த சமயத்திலும் வருவாய் தொடா்பாக பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் ஜிஎஸ்டி வருவாய் தொடா்ந்து அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப வரி வருவாயில் ஏற்படும் மாற்றங்களைக் குறிக்கும் மாநிலங்களுக்கான ‘வரி மிதப்பு’ ஜிஎஸ்டிக்கு முன்பு 0.65 ஆக இருந்த நிலையில் ஜிஎஸ்டிக்குப் பிறகு 1.23-ஆக அதிகரித்தது. ஜிஎஸ்டி 2.0 அமலான பின் இது மேலும் அதிகரிக்கும் எனத் தெரிவித்தன.

X
Dinamani
www.dinamani.com