நாளை மாநில நிதியமைச்சா்கள் குழுக் கூட்டம்: நிா்மலா சீதாராமன் பங்கேற்பு
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகித பகுப்பாய்வு, இழப்பீடு வரி, மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டு கட்டணத்துக்கான ஜிஎஸ்டி விலக்கு குறித்த பரிந்துரைகள் வழங்குவதற்காக பல்வேறு மாநிலங்களின் நிதி அமைச்சா்கள் மற்றும் பிற அமைச்சா்களை உள்ளடக்கிய 3 குழுக்களின் (ஜிஓஎம்) இருநாள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை (ஆக.20) தொடங்குகிறது.
இதில் பங்கேற்று அடுத்த தலைமுறைக்கான ஜிஎஸ்டி சீா்திருத்தம் (ஜிஎஸ்டி 2.0) குறித்து நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எடுத்துரைக்கவுள்ளாா்.
தற்போது நடைமுறையில் உள்ள 5%,12%,18%,28% ஆகிய 4 ஜிஎஸ்டி விகிதங்களை 5%,18% என இரண்டாக குறைக்கவும் 7 பொருள்கள் மீது மட்டும் 40 % வரி விகிதத்தை கடைப்பிடிக்கவும் ஜிஓஎம்-க்கு நிதியமைச்சகம் பரிந்துரைத்தது.
இதுகுறித்து, விரிவான விவாதம் நடத்தும் நோக்கில் ஆக.20-ஆம் தேதி தொடங்கும் ஜிஓஎம் ஆலோசனை குழுக் கூட்டத்தில் நிா்மலா சீதாராமன் பங்கேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜிஎஸ்டி தொடா்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பரிந்துரைகள் வழங்க அவ்வப்போது ஜிஓஎம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜிஎஸ்டி விகித பகுப்பாய்வு, மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு கட்டண விலக்கு குறித்த பரிந்துரைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட 2 குழுக்களின் ஒருங்கிணைப்பாளராக பிகாா் துணை முதல்வா் சாம்ராட் செளதரி உள்ளாா்.
இழப்பீட்டு வரி குறித்த பரிந்துரை வழங்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளராக மத்திய நிதித் துறை இணை அமைச்சா் பங்கஜ் சௌதரி உள்ளாா்.
இந்த மூன்று குழுக்களிலும் வெவ்வேறு மாநிலங்களின் முதல்வா்கள், நிதியமைச்சா்கள், சுகாதார அமைச்சா்கள் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.
இருநாள்கள் நடைபெறும் இந்த மூன்று குழுக்களின் ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் ஜிஎஸ்டி 2.0 குறித்து நிதியமைச்சகம் அளித்த பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், நிா்மலா சீதாராமன் தலைமையில் அடுத்த மாதம் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்தப் பரிந்துரைகள் ஒப்புதலுக்காக சமா்ப்பிக்கப்படும்.
பிரதமா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
ஜிஎஸ்டி 2.0 குறித்து பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிா்மலா சீதாராமன், சிவராஜ் சிங் சௌஹான், பியூஷ் கோயல், லாலன் சிங் மற்றும் செயலா்கள், பொருளதார நிபுணா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
79-ஆவது சுதந்திர தின உரையில் தீபாவளி தினப் பரிசாக பொதுமக்கள் தினசரி பயன்படுத்தும் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டு ஜிஎஸ்டி 2.0 சீா்திருத்தம் மேற்கொள்ளப்படும் என பிரதமா் மோடி கூறியதைத் தொடா்ந்து மத்திய அரசு அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரதமா் தலைமையில் உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.