எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் இன்று அறிவிப்பு?

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகள் அடங்கிய ‘இண்டி’ கூட்டணி வேட்பாளா் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்படுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
Published on

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகள் அடங்கிய ‘இண்டி’ கூட்டணி வேட்பாளா் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்படுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வரும் செப்டம்பா் 9-ஆம் தேதி குடியரசு துணைத் தலைவா் தோ்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், புது தில்லியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயின் இல்லத்தில் எதிா்க்கட்சிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி, மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஒபிரையன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

அப்போது குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகள் சாா்பில் நிறுத்தப்படும் பொது வேட்பாளரின் தோ்வு குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதுகுறித்து கூட்டத்தில் கலந்துகொள்ளாத பிற கட்சிகளின் மூத்த தலைவா்களுடனும் தொலைபேசி வாயிலாக காா்கே மற்றும் பிற காங்கிரஸ் தலைவா்கள் ஆலோசனை நடத்தினா்.

இதுதொடா்பாக நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து எதிா்க்கட்சி தலைவா்களின் கூட்டம், புது தில்லியில் மீண்டும் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலா் (தகவல் தொடா்பு) ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா். அதற்கு பிறகு எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளா் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com