குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு ? சி.பி. ராதாகிருஷ்ணன் - சுதர்சன் ரெட்டி போட்டி

குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் "இண்டி' கூட்டணியும் பரஸ்பரம் தென் மாநிலங்களைச் சேர்ந்த வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் நேரடிப் போட்டி உறுதியாகி உள்ளது.
CP Radhakrishnan Vs Sudershan Reddy For Vice-President
சி.பி. ராதாகிருஷ்ணன் - சுதர்சன் ரெட்டி
Published on
Updated on
2 min read

நமது சிறப்பு நிருபர்

குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் "இண்டி' கூட்டணியும் பரஸ்பரம் தென் மாநிலங்களைச் சேர்ந்த வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் நேரடிப் போட்டி உறுதியாகி உள்ளது.

இத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனும் காங்கிரஸ், சமாஜவாதி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் வேட்புமனுக்கள் முறையே புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்தபடி செப்.9-ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதால், இரு அணிகளின் வேட்பாளர்களும் தலைநகரில் முகாமிட்டு எம்.பி.க்களை கட்சி வாரியாக சந்தித்து ஆதரவு கேட்டும் வாழ்த்துகளைப் பெறும் நடைமுறையை இனி தொடங்குவர். சி.பி. ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை காலையில் தில்லிக்கு வந்தார். சுதர்சன் ரெட்டி வேட்பாளராக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே ஹைதராபாதில் இருந்து விமானத்தில் தில்லி வந்தார்.

இரு வேட்பாளர்களில் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. இருந்தபோதிலும், ஜனநாயக முறைப்படி சுதர்சன் ரெட்டியை இண்டி கூட்டணி களமிறக்கி தேர்தல் பரப்புரை நடவடிக்கையை தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

யாருக்கு அதிக வாய்ப்பு? மக்களவையில் உள்ள மொத்தம் உள்ள 542 எம்.பி.க்களில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 எம்.பி.க்கள் உள்ளனர், இண்டி கூட்டணியில் 249 எம்.பி.க்கள் உள்ளனர். மாநிலங்களவையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கிட்டத்தட்ட 130 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ராதாகிருஷ்ணனை ஆதரிப்பதால், ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது.

ஆந்திரத்தைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவாக அம்மாநிலத்தைச் சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஏழு மாநிலங்களவை, ஐந்து மக்களவை உறுப்பினர்களும் ஒடிஸாவைச் சேர்ந்த பிஜூ பட்நாயக்கின் ஏழு மாநிலங்களவை உறுப்பினர்களும் ஆதரவளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.

அந்தக் கட்சிகள் ஒருவேளை இண்டி கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்தாலும் கூட, ஆளும் கூட்டணி வேட்பாளரான ராதாகிருஷ்ணனுக்கு பெரும்பான்மை பலம் குறையாது.

தேர்தல் முறை: அரசமைப்பின் 63 முதல் 71 வரையிலான பிரிவுகள் மற்றும் குடியரசு துணைத்தலைவர் (தேர்தல்) விதிகளின்படி, ஜெகதீப் தன்கர் ராஜிநாமா செய்த 60 நாள்களுக்குள் மற்றும் இந்த ஆண்டு செப்டம்பர் 19 -க்கு முன்பாக அப்பதவிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 21 ஆகும். வாக்குப்பதிவு செப்டம்பர் 9 -ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்தியாவில், குடியரசு துணைத்தலைவரை மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் (தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமன எம்.பி.க்கள்) தேர்தல் மூலமோ ஒருமனதாகவோ ஏற்படும் முடிவின் அடிப்படையில் தேர்வு செய்கின்றனர். தேர்தலில் போட்டி ஏற்பட்டால் வாக்குச்சீட்டு அடிப்படையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தற்போது இரு அவைகளிலும் காலியாகவுள்ள மொத்தம் 6 காலியிடங்கள் நீங்கலாக வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக 782 எம்.பி.க்கள் உள்ளனர். தேர்தலில் வெற்றி பெற, ஒரு வேட்பாளர் மொத்த வாக்குகளில் பாதிக்கும் மேற்பட்ட வாக்குகளைப் (392 வாக்குகள்) பெற வேண்டும்.

இந்த கணக்கீட்டின்படி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு 423 வாக்குகள் கிடைக்கும் என மதிப்பிடப்படுவதால் அவரே நாட்டின் அடுத்த குடியரசு துணைத்தலைவர் ஆவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற, ஒரு வேட்பாளர் மொத்த வாக்குகளில் பாதிக்கும் மேற்பட்ட வாக்குகளைப் (392 வாக்குகள்) பெற வேண்டும். இந்த கணக்கீட்டின்படி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு 423 வாக்குகள் கிடைக்கும் என மதிப்பிடப்படுவதால் அவரே நாட்டின் அடுத்த குடியரசு துணைத் தலைவர் ஆவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com