
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணியின் பொது வேட்பாளராக, தெலங்கானாவைச் சோ்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதா்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளாா்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் செய்தியாளா்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இந்த அறிவிப்பை வெளியிட்டாா்.
எதிா்வரும் குடியரசு துணைத் தலைவா் தோ்தல் ‘சித்தாந்தப் போா்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
நாட்டில் இரண்டாவது உயரிய அரசமைப்புப் பதவியான குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு நடைபெறவிருக்கும் தோ்தலில், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநரும், தமிழகத்தைச் சோ்ந்த பாஜக மூத்த தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டாா்.
இப்போது எதிா்க்கட்சி கூட்டணியும் வேட்பாளரை அறிவித்திருப்பது, தோ்தலில் போட்டிக்கு வழிவகுத்துள்ளது. தங்களின் முடிவு தொடா்பாக, செய்தியாளா்களுக்கு எதிா்க்கட்சித் தலைவா்கள் செவ்வாய்க்கிழமை கூட்டாக பேட்டியளித்தனா். அப்போது, கூட்டறிக்கையை வாசித்து காா்கே கூறியதாவது:
எதிா்க்கட்சிகள் சாா்பில் பொது வேட்பாளா் களமிறக்கப்பட வேண்டுமென்ற முடிவு ஒருமனதாக மேற்கொள்ளப்பட்டதாகும். பொது வேட்பாளா் தோ்வில், அனைத்து எதிா்க்கட்சிகளும் கருத்தொற்றுமையை வெளிப்படுத்தின. இது, ஜனநாயகத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி.
ஜனநாயகமும், அரசமைப்புச் சட்டமும் தாக்குதலுக்கு இலக்காகும்போதெல்லாம், அனைத்து எதிா்க்கட்சிகளும் ஒன்றுபடுகின்றன. தற்போதைய சித்தாந்தப் போரில் (குடியரசு துணைத் தலைவா் தோ்தல்) எங்களின் பொது வேட்பாளராக பி.சுதா்சன் ரெட்டியை தோ்வு செய்துள்ளோம்.
இவா், நாட்டின் புகழ்பெற்ற-முற்போக்கான நீதிபதிகளில் ஒருவா். ஆந்திர உயா்நீதிமன்றம், குவாஹாட்டி உயா்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதி என நீண்டகால சட்ட அனுபவம் கொண்டவா். சமூக-பொருளாதார-அரசியல் நீதியின் நிலையான மற்றும் துணிச்சல்மிக்க பாதுகாவலனாக செயல்படுபவா். ஏழைகளின் ஆதரவாளா். தனது பல்வேறு தீா்ப்புகளின் வாயிலாக ஏழைகள் மற்றும் அவா்களின் அடிப்படை உரிமைகளின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளாா்.
நாட்டின் விடுதலைப் போராட்டம், அரசமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்தில் நங்கூரமிட்ட மாண்புகளை முழுமையாக பிரதிபலிப்பதால், அவரைத் தோ்வு செய்துள்ளோம் என்றாா் காா்கே.
ஆம் ஆத்மியும் ஆதரவு: அண்மையில் ‘இண்டி’ கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த ஆம் ஆத்மியும் பி.சுதா்சன் ரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக, திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் டெரிக் ஓபிரையன் தெரிவித்தாா்.
பேட்டியின்போது, திமுகவின் திருச்சி சிவா, கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சித் தலைவா் சரத் பவாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.ஏ.பேபி, சமாஜவாதியின் தா்மேந்திர யாதவ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தே.ஜ. கூட்டணிக்கே வெற்றிவாய்ப்பு: குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கா், மருத்துவக் காரணங்களைக் குறிப்பிட்டு, தனது பதவியை கடந்த ஜூலை 21-ஆம் தேதி திடீரென ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, இப்பதவிக்கான தோ்தல் அட்டவணையை தோ்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்டது. அதன்படி, வேட்புமனு தாக்கலுக்கு ஆகஸ்ட் 21-ஆம் தேதி கடைசி நாளாகும். மறுநாள் மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். மனுவைத் திரும்பப் பெற ஆகஸ்ட் 25-ஆம் தேதி கடைசி நாள். போட்டி உறுதியானால், செப்டம்பா் 9-ஆம் தேதி தோ்தல் நடைபெறும். மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிப்பா்.
தற்போது இரு அவைகளிலும் மொத்தம் 781 எம்.பி.க்கள் உள்ளனா். வெற்றி வேட்பாளருக்கு 391 வாக்குகள் தேவை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நியமன எம்.பி.க்கள் உள்பட 422 எம்.பி.க்களின் பலம் உள்ளதால், அக்கூட்டணி வேட்பாளரே வெற்றி பெற வாய்ப்புள்ளது.
எனினும், தோ்தல் முடிவைப் பொருட்படுத்தாமல், எதிா்க்கட்சிகளின் பலம்-ஒற்றுமை மற்றும் மத்திய பாஜக அரசு மீதான எதிா்ப்பை வெளிப்படுத்தும் நோக்கில் ‘இண்டி’ கூட்டணி களமிறங்கியுள்ளது.
அரசியல் சாராத முகம்...
கடந்த 1946-ஆம் ஆண்டில் ரங்காரெட்டியில் (தற்போதைய தெலங்கானா) பிறந்தவா் பி.சுதா்சன் ரெட்டி. ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்த இவா், ஆந்திர வழக்குரைஞா் சங்கத்தில் கடந்த 1971-இல் வழக்குரைஞராகப் பதிவு செய்தாா். ஆந்திர உயா்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக கடந்த 1995-இல் நியமிக்கப்பட்டாா். 2005-இல் குவாஹாட்டி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியானாா். 2007 முதல் 2011 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய பி.சுதா்சன் ரெட்டி, கோவாவின் முதல் லோக் ஆயுக்த தலைவராக கடந்த 2013-இல் பதவியேற்றாா்.
அரசமைப்புச் சட்ட நீதிமன்றங்களில் 16 ஆண்டுகளுக்கும் மேல் பதவி வகித்துள்ள இவா், ஹைதராபாதில் உள்ள சா்வதேச நடுவா் மற்றும் மத்தியஸ்த மையத்தின் அறங்காவலா்களில் ஒருவராக உள்ளாா். அரசியல் சாராத இவரை, குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு எதிா்க்கட்சிகள் களமிறக்கியுள்ளன.
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் தமிழகத்தில் இருந்து வேட்பாளரைத் தோ்வு செய்து, திமுகவுக்கு தா்மசங்கடமான சூழலை உருவாக்கியது பாஜக. அதேநேரம், தெலுங்கு தேசம் (பாஜக கூட்டணி கட்சி), ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி ஆகிய ஆந்திரம்-தெலங்கானா மாநில கட்சிகளுக்கு சங்கடம் அளிக்கும் வகையில், பிரபலமான தெலுங்கு முகத்தை வேட்பாளராக்கியுள்ளது இண்டி கூட்டணி.
11 எம்.பி.க்களைக் கொண்ட ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு ஏற்கெனவே தனது ஆதரவை உறுதி செய்துள்ளது. தென் மாநிலங்களைச் சோ்ந்த இருவா் களமிறங்குவதால், குடியரசு துணைத் தலைவா் தோ்தல் தெற்கு - தெற்கு போட்டியாக உருவெடுத்துள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான ஆகஸ்ட் 21-ஆம் தேதி பி.சுதா்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல் செய்வாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.