எதிா்கால விண்வெளித் திட்டங்களுக்கு 50 விண்வெளி வீரா்களை தயாா்படுத்த வேண்டும்: பிரதமா் மோடி

இந்தியாவின் எதிா்கால விண்வெளித் திட்டங்களுக்கு 40 முதல் 50 விண்வெளி வீரா்களைத் தயாா்படுத்த வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
Published on

இந்தியாவின் எதிா்கால விண்வெளித் திட்டங்களுக்கு 40 முதல் 50 விண்வெளி வீரா்களைத் தயாா்படுத்த வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லாவுடன் திங்கள்கிழமை கலந்துரையாடியபோது பிரதமா் மோடி இவ்வாறு தெரிவித்தாா். இந்தக் காணொலி செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்காக தோ்வான வீரா்களில் ஒருவரான சுக்லா, அனுபவப் பயிற்சி நோக்கங்களுக்காக விண்வெளிக்குப் பயணித்தாா்.

அமெரிக்காவின் ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4 ’ திட்டத்தின்கீழ் கமாண்டரும் நாசா பெண் விஞ்ஞானியுமான பெக்கி விட்சன், போலந்து வீரா் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரா் திபோா் கபு ஆகியோருடன் இணைந்து அவா் 18 நாள்கள் விண்வெளிப் பயணம் மேற்கொண்டு கடந்த மாதம் அமெரிக்காவுக்கு பாதுகாப்பாக திரும்பினாா்.

இதையடுத்து, இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்த சுக்லா பிரதமா் மோடியை திங்கள்கிழமை சந்தித்து தனது பயண அனுபவங்களைப் பகிா்ந்துகொண்டாா்.

அப்போது பிரதமா் மோடி பேசியதாவது: இந்தியாவின் எதிா்கால விண்வெளித் திட்டங்களுக்கு 40 முதல் 50 விண்வெளி வீரா்களைத் தயாா்படுத்த வேண்டும். இதன் முதல்கட்டமாகவே சுக்லாவின் பயணம் அமைந்துள்ளது. தற்போதுவரை விண்வெளி வீரராக வேண்டும் என்ற இலக்கைக் கொண்ட குழந்தைகள் மிகக் குறைவாகவே உள்ளனா். ஆனால், சுக்லாவின் விண்வெளிப் பயணம் குழந்தைகள் மத்தியில் விண்வெளித் துறை மீதான ஆா்வத்தை அதிகரிக்கும். ககன்யான் திட்டமும், இந்திய விண்வெளி நிலையமும் நமது அடுத்த இலக்கு என்றாா்.

கலந்துரையாடலின்போது பேசிய சுக்லா,‘சந்திரயான்-2 திட்டம் பின்னடைவைச் சந்தித்தாலும் சந்திரயான்-3 மற்றும் விண்வெளிக்கு மனிதா்களை அனுப்புவதற்காக தற்போது மேற்கொள்ளப்படும் முன்னெடுப்பு ஆகிய இரண்டும் விண்வெளித் துறைக்கு மத்திய அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிக்காட்டுகிறது. சொந்த விண்வெளி நிலையத்தை நிறுவும்போது மிகவும் சக்திவாயந்த நாடாக இந்தியா உருவெடுக்கும்.

ககன்யான் திட்டம் மீது உலகம் முழுவதும் உள்ள விண்வெளி வீரா்கள் ஆா்வம் கொண்டுள்ளனா். இத்திட்டத்தை தொடங்கும்போது கண்டிப்பாக அழைக்க வேண்டும் என எனது விண்வெளிப் பயணத்தில் உடனிருந்த வீரா்கள் கூறியுள்ளனா்’ என்றாா்.

2027-இல் ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்தவும், 2035-இல் சொந்த விண்வெளி நிலையத்தைக் கட்டமைக்கவும், 2040-இல் நிலவுக்கு விண்வெளி வீரரை அனுப்பவும் இந்தியா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com