மசோதாக்களுக்கு காலக்கெடு: குடியரசுத் தலைவரின் அதிகார பறிப்புக்கு ஒப்பாகும்-உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

மாநில சட்டப் பேரவைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட்ட தீர்ப்பின் மூலம், குடியரசுத் தலைவரின் விருப்புரிமை அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
Published on
Updated on
2 min read

நமது நிருபர்

மாநில சட்டப் பேரவைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட்ட தீர்ப்பின் மூலம், குடியரசுத் தலைவரின் விருப்புரிமை அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது.

தமிழக அரசு இயற்றிய 10 மசோதாக்களுக்கு மாநிலஆளுநர் ஒப்புதல் வழங்குவதில் தாமதம் செய்தது, சில மசோதாக்களை குடியரசுத்தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பியது ஆகியவற்றுக்கு எதிரான வழக்கில் ஆளுநர் மற்றும் குடியரசுத்தலைவர் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இது போன்ற நீதிமன்ற உத்தரவுகள் மூலம் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடுவை விதிக்க முடியுமா என்பன உள்ளிட்ட 14 கேள்விகளை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மூ உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி தெளிவுரை கேட்டிருந்தார்.

மத்திய அரசு வாதம்: இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த அமர்வில் நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்மா, ஏ.எஸ். சந்துர்கர் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் (சொலிசிட்டர் ஜெனரல்) துஷார் மேத்தா வாதிடுகையில், "அரசியலமைப்பின் முன்னோடிகள் தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள், விதிகளை துஷ்பிரயோகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை முன்பே அவர்கள் அனுமானித்திருந்தனர். அரசமைப்பின் 143(1) விதியின் கீழ் குடியரசுத்தலைவர் கோரிய தீர்ப்பின் தெளிவுரை மூலம் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான மேல்முறையீட்டு வழக்கில் எதுவும் கேட்கப்படவில்லை. மாறாக, அரசமைப்பு விதிகள் 200, 201, 142, 145(3), 361 ஆகியவற்றில் எழும் பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசமைப்பு சட்டம் தொடர்பான கேள்விகள் குறித்தே குடியரசுத் தலைவர் தெளிவுரை கோரியுள்ளார்' என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து, அரசியலமைப்பு சபை விவாதங்கள், வரலாற்றுப் பின்னணியை மேற்கோள் காட்டிய துஷார் மேத்தா, அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அப்போதே ஆளுநர்கள் மற்றும் குடியரசுத்தலைவருக்கு எந்த காலக்கெடுவையும் நிர்ணயிக்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தனர். "ஒரு கட்டத்தில், வரைவு மசோதா' ஒப்புதலுக்கு "ஆறு வாரங்களுக்குள்' என்று பரிந்துரைக்கப்பட்ட வார்த்தைகள் "இயன்றவரை விரைவில்' என்று இந்திய அரசியலமைப்பின் சிற்பி பி.ஆர். அம்பேத்கரின் தலையீட்டால் மாற்றப்பட்டதை சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், அதே அரசியலமைப்பு நிர்ணய சபையில் இருந்த சிலர் ஆறு வாரங்கள் என்பது கூட நீளமானது எனக்கருதி நியாயமான காலக்கெடுவின் தேவை குறித்து விவாதித்தார்களே என வினவினார். அதற்கு துஷார் மேத்தா, "உயர்ந்த அரசியலமைப்பு பொறுப்பில் உள்ளவர்களுக்கு கடுமையான காலக்கெடு விதிக்கப்படக்கூடாது என்பதுதான் முடிவாக இருந்தது. காலக்கெடுவை விதிக்காமல் தவிர்ப்பது அறிந்தே செய்யப்பட்டது' என்று பதிலளித்தார்.

அட்டர்னி ஜெனரல் கருத்து: இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு உதவும் வகையில் ஆஜரான மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் (அட்டர்னி ஜெனரல்) ஆர். வெங்கடரமணி, "உச்சநீதிமன்றத்தின் ஏப்ரல் 8- ஆம் தேதி தீர்ப்பு "சட்டமியற்றும் அவைகள் மீதான நீதித்துறையின் அத்துமீறல்'. ஒரு தீர்ப்பில் சந்தேகங்கள் எழுந்தால், பிரிவு 143- இன் கீழ் உச்சநீதிமன்றத்திடம் தெளிவுரை கேட்கும் அதிகாரத்தை குடியரசுத் தலைவர் பெற்றுள்ளார்.

"சட்டக் கேள்விகள் எழுந்தால் அதைத் தீர்மானிக்க குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் இடம்பெற்ற அமர்விடம் வழக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று அரசமைப்பு விதி145 கூறுகிறது. அதை உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் தீர்ப்பு மீறியுள்ளது' என அட்டர்னி ஜெனரல் வாதிட்டார். புதன்கிழமையும் (ஆக.20) விசாரணை தொடர்கிறது.

உங்களுக்கு என்ன பிரச்னை?: தமிழகம், கேரளத்துக்கு நீதிபதி கேள்வி

குடியரசுத்தலைவரின் தெளிவுரை கடிதம் விசாரணைக்கு உகந்தது அல்ல என்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசியல் சாசன அமர்வு விசாரணையின்போது தமிழகம் மற்றும் கேரள அரசுகள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

அப்போது நீதிபதி சூர்ய காந்த், "குடியரசுத்தலைவர் கேட்ட தெளிவுரையைப் பரிசீலிக்கிறோம். உண்மையிலேயே அவரது நடவடிக்கையை எதிர்ப்பதில் நீங்கள் தீவிரமாக இருக்கிறீர்களா? உங்களுக்கு என்ன பிரச்னை?

சட்டம் தொடர்பாகவே எங்களின் கருத்துகள் வெளிப்படுத்தப்படுமே தவிர ஏப்ரல் 8 தீர்ப்பு மீது இருக்காது' என்று குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com