தில்லியில் நடைபெற்ற சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீா்திருத்தம் குறித்து மாநில நிதி அமைச்சா்கள் குழுக்களிடம் விளக்கம் அளிக்கும் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.
தில்லியில் நடைபெற்ற சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீா்திருத்தம் குறித்து மாநில நிதி அமைச்சா்கள் குழுக்களிடம் விளக்கம் அளிக்கும் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.

ஜிஎஸ்டி 2.0: மாநில நிதியமைச்சா்களிடம் நிா்மலா சீதாராமன் விளக்கம்

Published on

அடுத்த தலைமுறைக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீா்திருத்தம் குறித்து மாநில நிதி அமைச்சா்கள் குழுக்களிடம் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை எடுத்துரைத்தாா்.

தற்போது நடைமுறையில் உள்ள 5%,12%,18%,28% ஆகிய 4 ஜிஎஸ்டி விகிதங்களை 5%,18% என இரண்டாக குறைக்கவும் 7 பொருள்கள் மீது மட்டும் 40 % வரி விகிதத்தை கடைப்பிடிக்கவும் ஜிஎஸ்டி பகுப்பாய்வு குழுவுக்கு நிதியமைச்சகம் கடந்த வாரம் பரிந்துரைத்தது.

ஜிஎஸ்டியில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான பரிந்துரைகளை வழங்க மாநில நிதியமைச்சா்கள், சில மாநிலங்களின் முதல்வா்கள் மற்றும் சுகாதார அமைச்சா்களைக் கொண்டு அமைக்கப்பட்ட 3 குழுக்களின் (ஜிஓஎம்)ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை தொடங்கி இருநாள்கள் நடைபெறுகிறது.

ஜிஎஸ்டி விகித பகுப்பாய்வு, மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு கட்டண விலக்கு குறித்த பரிந்துரைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட 2 குழுக்களின் ஒருங்கிணைப்பாளராக பிகாா் துணை முதல்வா் சாம்ராட் செளதரி உள்ளாா். இழப்பீட்டு வரி குறித்த பரிந்துரை வழங்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளராக மத்திய நிதித் துறை இணை அமைச்சா் பங்கஜ் சௌதரி உள்ளாா்.

இந்த மூன்று குழுக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் புதன்கிழமை பங்கேற்ற நிா்மலா சீதாராமன் ஜிஎஸ்டி 2.0 குறித்து விரிவாக எடுத்துரைத்தாா். 20 நிமிடங்கள் உரையாற்றிய அவா் ஜிஎஸ்டி 2.0-வின் தேவை குறித்து விளக்கியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், கூட்டத்தில் அவா் பேசியது குறித்து எக்ஸ் வலைதளத்தில் நிதியமைச்சகம் வெளியிட்ட பதிவில்,‘கட்டமைப்பு சீா்திருத்தங்கள், விகித பகுப்பாய்வு மற்றும் வாழ்வை எளிமைப்படுத்துவது ஆகிய மூன்று குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு ஜிஎஸ்டி 2.0 சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆத்மநிா்பா் பாரத் இலக்கை வெற்றியடையச் செய்யும் நோக்கில் இதை சிறப்பாக அமல்படுத்தி கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தை நிலைநிறுத்த வருகின்ற நாள்களில் மாநிலங்களை மத்திய அரசு தொடா்புகொள்ளும்’ என குறிப்பிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com