
மூத்த பத்திரிகையாளர்கள் கரண் தாப்பர், சித்தார்த் வரதராஜனுக்கு அசாம் காவல் துறையினர் சம்மன் அனுப்பியதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தி வயர் இணையதளம் முடக்கம்
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்திய ஆயுதப்படைகள் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக கட்டுரை வெளியிட்ட ‘தி வயர்’ இணையதளம் கடந்த மே 9 ஆம் தேதி முடக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ‘தி வயர்’ ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான சித்தார்த் வரதராஜன் மீது அசாம் காவல் துறை வழக்கு ஒன்றையும் தொடுத்திருந்தது. இந்த வழக்கில் சித்தார்த் வரதராஜனுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால பாதுகாப்பு வழங்கியிருந்தது.
இது தொடர்பாக சித்தார்த் வரதராஜன், மற்றொரு பத்திரிகையாளர் கரண் தாப்பர் இருவருக்கும் குவாஹாட்டி குற்றவியல் காவல் துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இதில், ஆகஸ்ட் 12 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜோய்மால்யா பாக்சி அடங்கிய அமர்வு, மோரிகன் மாவட்ட போலீஸார் பிஎன்எஸ் பிரிவு 152 கீழ், இந்திய இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட வழக்குகளில் இருந்து இடைக்கால பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.
அதே நாளில் இந்த வழக்கில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஆஜராகுமாறு குவாஹாட்டி காவல் நிலையம் இருவருக்கும் தனித்தனியாக சம்மன் அனுப்பியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
மூத்த பத்திரிகையாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது தொடர்பாக கண்டனம் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “தி வயரின் மூத்த பத்திரிகையாளர்களான சித்தார்த் வரதராஜன் மற்றும் கரண் தாப்பர் இருவருக்கும் அசாம் மாநில காவல் துறை சம்மன் அனுப்பியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்ற பாதுகாப்பு வழங்கியிருந்தும், சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கின் விவரங்கள், முதல் தகவல் அறிக்கையின் நகல் எதுவும் விவரமாக குறிப்பிடாமல் கைது செய்யப்படும் என மிரட்டல் விடப்படுகிறது.
ரத்துசெய்யப்பட்ட தேச துரோக சட்டத்திற்கு மாற்றாகப் பிஎன்எஸ் பிரிவு 152-ன் கீழ், பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கப்படுகிறது.
கேள்வி கேட்பதை தேச துரோகமாகக் கருதினால், ஜனநாயகம் இருக்காது” எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.