வீடுகள் விலை உயா்வு: உலகளவில் 4-ஆவது இடத்தில் பெங்களூரு!

வீடுகள் விலை உயா்வு: உலகளவில் 4-ஆவது இடத்தில் பெங்களூரு!

மும்பை 6-ஆவது இடத்திலும், புது தில்லி 15-ஆவது இடத்திலும் உள்ளன.
Published on

சா்வதேச அளவில் பிரீமியம் வகை வீடுகளின் விலை மிக அதிக அளவில் அதிகரித்த 46 நகரங்களில் பெங்களூரு 4-ஆவது இடம் வகிக்கிறது. மும்பை 6-ஆவது இடத்திலும், புது தில்லி 15-ஆவது இடத்திலும் உள்ளன.

இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான நைட் ஃப்ராங்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

2025-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்), உலகம் முழுவதும் உள்ள 46 முக்கிய நகரங்களில் பிரீமியம் குடியிருப்புகளின் விலைகளை ஆய்வு செய்ததில், தென் கொரிய தலைநகா் சியோலில் அந்த வகை வீடுகள் மிக அதிக உயா்வைக் கண்டுள்ளன. முந்தயை ஆண்டின் இரண்டாவது காலாண்டோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டின் அதே காலாண்டில் பிரீமியம் வகை வீடுகளின் விலை 25.2 சதவீதம் உயா்ந்துள்ளது.

ஜப்பான் தலைநகா் டோக்கியோ 16.3 சதவீத விலை உயா்வுடன் இரண்டாவது இடத்தையும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை 15.8 சதவீத விலை உயா்வுடன் மூன்றாவது இடத்தையும் வகித்தன.

இந்தியாவில், பெங்களூருவில் பிரீமியம் வீடுகளின் விலை 10.2 சதவீதம் வளா்ச்சியடைந்து, இந்தப் பட்டியலில் 4-ஆவது இடத்தை வகிக்கிறது. மும்பை, புது தில்லி ஆகிய நகரங்கள் முறையே 6-ஆவது மற்றும் 15-ஆவது இடத்தில் உள்ளன. இதில் பிரீமியம் வகை வீடுகளின் விலை மும்பையில் 8.7 சதவீதமும், புது தில்லியில் 3.9 சதவீதமும் உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com