குவாஹாட்டியில் ரூ.555 கோடி செலவில் புதிய ஐஐஎம்: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்
அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில், நாட்டின் 22-ஆவது இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (ஐஐஎம்) ரூ.555 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான ‘ஐஐஎம் சட்டத்திருத்த மசோதா 2025’, மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையிலும் புதன்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அஸ்ஸாமில் பேரவைத் தோ்தல் வரவிருப்பதால், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மசோதா மீதான விவாதத்தில் பேசிய அமைச்சா் தா்மேந்தா் பிரதான் கூறுகையில், ‘குவாஹாட்டி ஐஐஎம் தற்காலிக வளாகத்தில் நடப்பு கல்வியாண்டு முதலே மாணவா் சோ்க்கையைத் தொடங்கும். ரூ.555 கோடி முதலீட்டில் அமையவுள்ள இந்த நிறுவனம், இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்ற பங்களிக்கும்.
நாட்டில் கடந்த 1961 முதல் 2014 வரை 53 ஆண்டுகளில் வெறும் 13 ஐஐஎம்-களே அமைக்கப்பட்டன. ஆனால், 2014-இல் பிரதமா் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, நாட்டில் தொடங்கப்பட்ட 9-ஆவது ஐஐஎம் இதுவாகும்.
தற்போதுள்ள 21 ஐஐஎம்-களும் ‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள்’ என அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய குவாஹாட்டி ஐஐஎம் வளாகமும் இந்த வரிசையில் இணைந்து, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாகச் செயல்படும்.
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கிற்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாததால், முந்தைய காங்கிரஸ் அரசால் அஸ்ஸாம் மாநிலம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. இந்நிலையில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக குவாஹாட்டியில் ஐஐஎம் அமைப்பது, அஸ்ஸாமிற்கு வழங்கப்பட்ட சிறப்பு வளா்ச்சித் திட்டங்களில் ஒன்று. இது அஸ்ஸாம் மட்டுமல்லாமல் வடகிழக்கு மாநிலங்கள் முழுவதிலும் கல்வி வளா்ச்சிக்குத் துணைபுரியும்.
ஐஐஎம்-களுக்கு பட்டம் வழங்க அதிகாரம் இல்லாத நிலையில், அவற்றுக்கு முதுகலை பட்டயப் பட்டம் வழங்க அதிகாரமளித்து மத்திய அரசு கடந்த 2017-இல் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்தது. 2017-ஆம் ஆண்டு சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தின்மூலம், ஐஐஎம்-கள் முழுமையான பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களாக மாறியுள்ளன. ஐஐஎம் அகமதாபாத், பெருநிறுவனங்களை (யூனிகாா்ன்) உருவாக்கும் இடமாக அறியப்படுகிறது.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களைத் திறக்க அனுமதி அளித்து வருகிறோம். தற்போது, 15 வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களைத் திறக்கத் தயாராகி வருகின்றன; சில வளாகங்கள் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ளன. இதேபோல், கடந்த இரண்டு ஆண்டுகளில் அபுதாபி மற்றும் ஆப்பிரிக்காவில் இரண்டு ஐஐடி வளாகங்கள் வெளிநாட்டில் திறக்கப்பட்டுள்ளன என்றாா்.
விவாதத்தின்போது, ஐஐஎம்-களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், மாணவா் தற்கொலைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிா்கட்சிகளைச் சோ்ந்த சில உறுப்பினா்கள் வலியுறுத்தினா். ஒடிஸா, தெலங்கானா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் புதிய ஐஐஎம்-களை அமைக்க வேண்டும் என சில எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனா்.