
முக்கிய மசோதாக்களை கூட்டத்தொடரின் கடைசி நாள்களில் தாக்கல் செய்யலாமா? என்று திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்தார்.
பிரதமா், மத்திய அமைச்சா்கள், முதல்வா் ஆகியோா் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால், அவா்களைப் பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாக்களை மக்களவையில் புதன்கிழமை மத்திய அரசு அறிமுகப்படுத்தி முன்மொழிந்தது.
அதில் முக்கிய அம்சமாக, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றங்களில் கைது செய்யப்பட்டு தொடா்ந்து 30 நாள்கள் காவலில் வைக்கப்பட்டால், 31-ஆவது நாள் அவா்கள் பதவிநீக்கம் செய்யப்படுவா். இதற்காக யூனியன் பிரதேச அரசு திருத்த மசோதா 2025, அரசமைப்பு (130-ஆவது திருத்தம்) மசோதா 2025, ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2025 ஆகிய 3 மசோதாக்களை மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால், இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதாவின் நகல்களை எதிர்க்கட்சிகள் கிழித்ததுடன், அதனை அமித் ஷா அருகே தூக்கியெறிந்தனர்.
ஜூலை 21-இல் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக. 21-ஆம் தேதியுடன் முடிவடைய திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முக்கிய மசோதாக்களை கூட்டத்தொடரின் கடைசி நாள்களில் தாக்கல் செய்யலாமா? என்று திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்தார்.
இது குறித்து, சென்னை விமான நிலையத்தில் இன்று(ஆக. 20) செய்தியாளர்களுடன் கனிமொழி பேசியதாவது: “நாடாளுமன்றம் எப்போது முடியும் என்று கடைசி நாள் வரை காத்திருந்து, அதன்பின் முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்யும் பழக்கத்தை மத்திய அரசு வழக்கமாக்கிக் கொண்டுள்ளது.
எதிர்க்கட்சிகளுக்கு மசோதாக்களை வாசிக்கக்கூட கால அவகாசம் தராமல் மத்திய அரசு மசோதாக்களை அறிமுகப்படுத்துவதுடன் தாக்கல் செய்வதையும் வழக்கமாக்கியுள்ளது.
ஜனநாயகத்தை சீர்குலைக்க வேண்டும் என்பதே அவர்களது குறிக்கோள்.
தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையிலும், பிகாரில் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம்(எஸ்.ஐ.ஆர்.) பற்றிய விவாதம் நாடாளுமன்றத்தில் நடத்தப்படவேயில்லை” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.