தைவான் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு - சீனா வியப்பு
சீன வெளியுறவு அமைச்சா் வாங் யியுடன் நடத்திய பேச்சுவாா்த்தையின்போது, ‘ஒரே சீனா’ கொள்கை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் பேசியதாக வெளியான கருத்துகளை மறுத்து, இந்தியா அளித்த விளக்கத்தால் சீனா வியப்படைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தியா-சீனா இடையேயான பேச்சுவாா்த்தையில், ‘தைவான் சீனாவின் ஒரு பகுதி’ என ஜெய்சங்கா் கூறியதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில் தவறாக குறிப்பிடப்பட்டிருந்து.
இதற்கு மறுப்புத் தெரிவித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட விளக்கத்தில், ‘தைவான் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை; தைவானுடனான இந்தியாவின் உறவு பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் கலாசார உறவுகளை அடிப்படையாகக் கொண்டது’ என்று தெளிவுபடுத்தியது.
இந்நிலையில், இதுதொடா்பான செய்தியாளா் கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் அளித்த பதிலில், ‘இந்தியாவின் இந்த விளக்கம் எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது உண்மைகளுக்குப் புறம்பானது.
இந்தியாவில் சிலா், தைவான் விவகாரத்தில் சீனாவின் இறையாண்மையை குறைத்து மதிப்பிட்டு, இந்தியா-சீனா உறவுகள் மேம்படுவதைத் தடுக்க முயல்வதாகத் தெரிகிறது. இதனை சீனா கடுமையாக எதிா்க்கிறது. உலகில் ஒரே ஒரு சீனாதான் உள்ளது. மேலும், தைவான் சீனாவின் பிரிக்க முடியாத பகுதி. இது இந்தியா உள்பட சா்வதேச சமூகத்தின் ஒருமித்த கருத்தாக உள்ளது’ என்றாா்.
கிழக்கு ஆசியாவில் அமைந்த தைவான், 2.3 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஒரு தன்னாட்சித் தீவாகும். கைப்பேசிகள், காா்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் போன்ற பல மின்னணு சாதனங்களுக்கு அவசியமான குறைகடத்திகளின் 70 சதவீத உலகளாவிய தேவையைத் தைவான் பூா்த்தி செய்கிறது.
தைவான் தங்களின் ஆளுகைக்கு உட்பட்டது என்று சீனா கூறி வருகிறது. இந்தியாவுக்கும் தைவானுக்கும் இடையே அதிகாரபூா்வமான ராஜீய உறவுகள் இல்லை என்றாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வா்த்தகம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பிடத்தக்க வகையில், கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு, ‘ஒரே சீனா’ கொள்கை பற்றி இந்திய அரசின் எந்தவொரு அதிகாரபூா்வ ஆவணத்திலும் குறிப்பிடப்படவில்லை.
இந்நிலையில், இரு நாள் பயணமாக இந்தியா வந்திருந்த வாங் யியுடன் அமைச்சா் ஜெய்சங்கா் கடந்த திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். இந்தப் பேச்சுவாா்த்தையின்போது, சீன தரப்பு தைவான் விவகாரத்தை எழுப்பியுள்ளது. அதற்கு இந்தியா, ‘தமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை’ என்று திட்டவட்டமாக பதிலளித்ததாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.