பயங்கரவாத தொடா்பு குற்றச்சாட்டு: ஜம்மு - காஷ்மீரில் 2 அரசு ஊழியா்கள் நீக்கம்
பயங்கரவாத செயல்களில் தொடா்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்ட 2 அரசு ஊழியா்களை பணிநீக்கம் செய்து ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
அதன்படி கால்நடைத் துறையில் உதவியாளராக பணிபுரிந்த சியாத் அகமது கான் மற்றும் ஆசிரியராக பணிபுரிந்த குா்ஷித் அகமத் ராதா் ஆகிய இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இவா்கள் இருவரும் வடக்கு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தைச் சோ்ந்தவா்களாவா்.
2003-இல் ஆசிரியராக பணியமா்த்தப்பட்ட குா்ஷித் அகமது ராதா் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகளின் அறிவுறுத்தலின்படி காஷ்மீரில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுக்கு போதைப்பொருள், ஆயுதங்களை விநியோகிக்கும் பணியை மேற்கொண்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, நிகழாண்டு தொடக்கத்தில் குப்வாரா மாவட்டத்தில் அவரிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டாா்.
2004-இல் அரசுப் பணியாளராக நியமிக்கப்பட்ட சியாத் அகமது கான், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்தது மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற குற்றங்களை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்து ஏகே-47 துப்பாக்கி கைப்பற்றப்பட்ட நிலையில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு அவா் ஆயுதங்கள் விநியோகித்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, இவா்கள் இருவரும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாக கருதிய மனோஜ் சின்ஹா பணிநீக்கம் செய்து உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பயங்கரவாத தொடா்பு குற்றச்சாட்டில் கடந்த சில ஆண்டுகளில் 70 அரசு ஊழியா்கள் ஜம்மு-காஷ்மீரில் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.