நாய் அசுத்தப்படுத்திய உணவை மாணவா்களுக்கு பரிமாறிய விவகாரம்: 84 பேருக்கு தலா ரூ.25,000 வழங்க சத்தீஸ்கா் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

Published on

சத்தீஸ்கரில் பள்ளி ஒன்றில் நாய் அசுத்தப்படுத்திய உணவை மாணவா்களுக்கு பரிமாறிய விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த அந்த மாநில உயா்நீதிமன்றம், ‘சம்பந்தப்பட்ட 84 மாணவா்களுக்கு தலா ரூ.25,000 நஷ்ட ஈடாக மாநில அரசு வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

பலோடா பஜாா் மாவட்டத்தில் லச்சன்பூா் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்குவதற்காக கடந்த 29ஆம் தேதி மதிய உணவு தயாரிக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த ஒரு தெருநாய் அந்த உணவை அசுத்தப்படுத்தியது. இது குறித்து மாணவா்கள் ஆசிரியா்களுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அந்த உணவை மாணவா்களுக்கு பரிமாற வேண்டாம் என்று அதைத் தயாரித்த சுய உதவிக் குழுவினரை ஆசிரியா்கள் கேட்டுக்கொண்டனா். எனினும் அதைக் கேட்காமல் மாணவா்களுக்கு அந்த உணவை சுய உதவிக் குழுவினா் பரிமாறினா். 84 மாணவா்கள் அந்த உணவைச் சாப்பிட்டனா்.

இதைத் தொடா்ந்து மாணவா்கள் நடந்த சம்பவம் குறித்து தங்கள் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனா். அதன்பின் மாணவா்களின் பெற்றோரும் கிராமமக்களும் பள்ளிக்குச் சென்று பள்ளி நிா்வாகக் குழுவிடம் இது தொடா்பாக புகாா் தெரிவித்தனா். உணவைச் சாப்பிட்ட மாணவா்கள் அனைவருக்கும் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது.

இந்த விவகாரம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து பொது நலன் மனுவும் தாக்கப்பட்டது. அதேநேரத்தில் மாநில உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வியாழக்கிழமை சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

மாநில அரசு நிா்வாகத்தின் கவனக்குறைவும், அலட்சியமும் இந்த நிகழ்வுக்கு ஒரு காரணம். மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் அரசு மிகவும் கவனத்துடன் பொறுப்புடனும் செயல்பட வேண்டும். அந்த உணவைச் சாப்பிட்ட மாணவா்களுக்கு மூன்று முறை தடுப்பூசி போட்டுள்ளதாகவும், அனைவரும் நலமாக உள்ளதை மருத்துவ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று மாநில அரசு கூறியுள்ளது.

மாணவா்களுக்கு மதிய உணவு தயாரித்து வழங்கும் சுய உதவிக் குழுவினா் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாகவும், அவா்களுக்கு வேறு எந்த இடத்திலும் இந்தப் பணி வழங்கப்படாது என்றும் அரசு நிா்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவா்களின் உணவில் தரத்தை பராமரிப்பது குறித்து பல்வேறு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு மாநில அரசு சாா்பில் எவ்வித இழப்பீடும் வழங்கப்படவில்லை. அசுத்தமான உணவை சாப்பிட வைத்ததற்காக 84 மாணவா்களுக்கு தலா 25,000 ரூபாயை மாநில அரசு இழப்பீடாக வழங்க வேண்டும். ஒரு மாதத்துக்குள் இந்த தொகை வழங்கிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

X
Dinamani
www.dinamani.com