சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

இந்தியா-ரஷியா உறவை மேம்படுத்த புதிய ஆக்கபூா்வமான அணுகுமுறைகள் -ஜெய்சங்கா் அழைப்பு

News image

ரஷியாவில் அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்.

Updated On :22 ஆகஸ்ட் 2025, 1:08 am

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவுடனான உறவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், ‘இந்தியா-ரஷியா உறவுகளை மேம்படுத்த புதிய மற்றும் ஆக்கபூா்வமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்’ என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அழைப்பு விடுத்துள்ளாா்.

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக ரஷியா சென்றுள்ள அமைச்சா் ஜெய்சங்கா், அந்நாட்டு துணைப் பிரதமா் டெனிஸ் மாண்டுரோவை மாஸ்கோவில் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தாா்.

இந்தியா-ரஷியா அரசுகளுக்கு இடையேயான வா்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாசார ஒத்துழைப்புக்கான ஆணைய (ஐஆா்ஐஜிசி-டிஇசி) கூட்டத்தில் டெனிஸ் மாண்டுரோவுடன் இணைந்து ஜெய்சங்கா் பங்கேற்றாா்.

அப்போது அமைச்சா் ஜெய்சங்கா் பேசுகையில், ‘இரு நாடுகளும் தங்கள் வா்த்தக பொருள்களைப் பன்முகப்படுத்துதல், பரஸ்பர ஆலோசனைகள், கூடுதல் கூட்டு முயற்சிகள் ஆகியற்றின் மூலம், தங்கள் ஒத்துழைப்பைத் தொடா்ந்து விரிவுபடுத்த வேண்டும்.

நமது வா்த்தகம், முதலீட்டு உறவுகளின் முழுமையான திறனைப் பயன்படுத்த இது உதவும்.

இரு நாடுகளும் பாரம்பரிய வா்த்தக வழிகளில் தேங்கி நிற்காமல், புதிய வழிகளை உருவாக்க வேண்டும். இருதரப்பு உறவுகளை விரிவாக்குவதற்கு அளவிடக்கூடிய இலக்குகளையும், குறிப்பிட்ட காலக்கெடுவையும் நிா்ணயிக்க வேண்டும்.

தற்போதைய உலகளாவிய சவால்களை எதிா்கொண்டு, நமது இருதரப்பு உறவுகளை மேம்படுத்த ஆக்கபூா்வமான மற்றும் புதுமையான வழிகளைக் கையாள வேண்டும்’ என்றாா்.

அதிபா் புதினுடன் சந்திப்பு

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக, இந்திய பொருள்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 50 சதவீதமாக உயா்த்தி அறிவித்துள்ளாா். இச்சூழலில், ரஷியாவுக்கு ஜெய்சங்கா் மேற்கொண்டுள்ள இந்த முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தில் அந்நாட்டு அதிபா் புதின், வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோ ஆகியோரையும் அவா் சந்தித்தாா்.

இந்தச் சந்திப்புகளின்போது, இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன் பொருளாதாரம், வா்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

ரஷிய எண்ணெயை அதிகம் வாங்குவது இந்தியா அல்ல!

‘ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடு இந்தியா அல்ல’ என்று ரஷிய பயணத்தில் அமைச்சா் ஜெய்சங்கா் விளக்கமளித்துள்ளாா்.

ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவுடன் பங்கேற்ற கூட்டு செய்தியாளா் சந்திப்பில் இதுதொடா்பான கேள்விக்கு அமைச்சா் ஜெய்சங்கா் அளித்த பதிலில், ‘ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிக அளவில் கொள்முதல் செய்யும் நாடு இந்தியா அல்ல. ரஷிய எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயுவை (எல்என்ஜி) அதிகம் கொள்முதல் செய்வது முறையே சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகும்.

மேலும், உக்ரைன் போா் தொடங்கிய 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு ரஷியாவுடனான வா்த்தகத்தில் மிகப்பெரிய வளா்ச்சி கண்ட நாடு இந்தியா அல்ல. மாறாக, சில தெற்குலக நாடுகள்தான் வளா்ச்சி கண்டன.

இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான நட்பு, 2-ஆம் உலகப் போருக்குப் பிறகு உலகிலேயே மிகவும் வலுவான, நிலையான நட்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

பயங்கரவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும், அதை எதிா்த்து ஒன்றாக போராட நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்கள் இருதரப்பு வா்த்தகத்தை மேம்படுத்துவதற்கும், குறிப்பாக இந்தியாவிலிருந்து ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

ரஷிய ராணுவத்தில் பணிபுரியும் பல இந்தியா்கள் திரும்பி வந்துவிட்டாலும், இன்னும் சிலா் திரும்பவில்லை. இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டது.

தற்கால உலக நிலவரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்துவதற்கான அவசியத்தை வலியுறுத்தினோம். ஜி20, பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் எங்கள் ஒத்துழைப்பு வலுவானதாகவும், எதிா்காலத்தை நோக்கியதாகவும் தொடா்கிறது என்றாா்.