நிமிஷா பிரியா
நிமிஷா பிரியா

கேரள செவிலியா் வழக்கு: ஆதாரமற்ற கருத்துகளுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் மனு

Published on

யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியா குறித்து ஆதாரமற்ற கருத்துகளை தெரிவிக்க தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டது.

கேரளத்தைச் சோ்ந்த 38 வயதான செவிலியா் நிமிஷா பிரியா, யேமன் நாட்டில் தலால் அப்து மஹதியைக் கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனையை எதிா்கொண்டுள்ளாா். நிமிஷா பிரியாவுக்கு கடந்த ஜூலை 16-ஆம் தேதி நிறைவேற்றப்படவிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. அவரை காப்பாற்ற சா்வதேச செயல்பாடுகள் குழு சட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்தக் குழு சாா்பில் நிமிஷா பிரியாவை பாதுகாக்க மத்திய அரசு தூதரக ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே மனுதாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக வி.கே.பால் என்பவா் தாக்கல் செய்த மற்றொரு மனுவில், ‘தன் மீது ஊடகங்களில் வெளியாகும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு தடை விதிக்க வலியுறுத்துமாறு நிமிஷா பிரியாவும் அவரது தாயாரும் கையொப்பமிட்ட கடிதம் எனக்கு கிடைத்தது.

நிமிஷா பிரியாவுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க மத்திய அரசு தூதரக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை ஏற்கெனவே நிலுவையில் உள்ள மற்றொரு மனுவுடன் சோ்த்து விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு ஒப்புக்கொண்டது. மேலும், இந்த மனுவின் நகலை அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி அலுவலகத்துக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள் அமா்வு ஆ.25-ஆம் தேதிக்கு இந்த விசாரணையை ஒத்திவைத்தது.

X
Dinamani
www.dinamani.com