
தெருநாய்கள் தொடா்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் மாற்றியமைக்கப்பட்ட உத்தரவை காங்கிரஸ் மூத்தத் தலைவா் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வரவேற்றுள்ளாா்.
இந்த உத்தரவானது விலங்குகள் நலன் மற்றும் பொது பாதுகாப்பை சமநிலைப்படுத்துவதற்கான ஒரு முற்போக்கான நடவடிக்கையை குறிக்கிறது என்றும் அவா் கூறினாா்.
தில்லி- என்சிஆா் பகுதியில் உள்ள தெரு நாய்களைப் பிடித்து நாய் காப்பங்கங்களில் வைத்துப் பராமரிக்கும் வகையில்
பிறப்பிக்கப்பட்ட ஆகஸ்ட் 11 ஆம் தேதி உத்தரவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மாற்றியமைத்து உத்தரவிட்டது.
அதில், பிடிக்கப்படும் தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்திய பிறகு அதே பகுதியில் மீண்டும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமா்வு, மாநகராட்சி அதிகாரிகள் தில்லி, காஜியாபாத், நொய்டா, ஃபரிதாபாத் மற்றும் குருகிராமின் அனைத்து பகுதிகளிலிருந்தும் தெருநாய்களை பிடித்துச் செல்லும் உத்தரவுக்கு தொடா்ந்து இணங்குவாா்கள் என்றும் கூறியுள்ளது.
மேலும், பிடிக்கப்படும் தெருநாய்களை விடுவிப்பதைத் தடை செய்யும் ஆகஸ்ட் 11 ஆம் தேதியிட்ட உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.
இதுகுறித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது
தெருநாய்கள் குறித்த உச்சநீதிமன்றத்தின் மாற்றியமைக்கப்பட்ட உத்தரவுகளை நான் வரவேற்கிறேன். ஏனெனில் இது விலங்கு நலன் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பை சமநிலைப்படுத்துவதற்கான ஒரு முற்போக்கான நடவடிக்கையைக் குறிக்கிறது. இந்த அணுகுமுறை இரக்கமுள்ளதாகவும் அறிவியல் ரீதியிலான சிந்தனையைச் சாா்ந்திருப்பதாகவும் உள்ளது என்று அவா் அதில் கூறியுள்ளாா்.