சுதா்சன் ரெட்டி நக்ஸல் ஆதரவாளா்: அமித் ஷா கடும் குற்றச்சாட்டு

கேரள மாநிலம், கொச்சியில் தனியாா் ஊடக  கருத்தரங்கை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்த அமித் ஷா, உடன் கேரள மாநில பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா் உள்ளிட்டோா்.
கேரள மாநிலம், கொச்சியில் தனியாா் ஊடக கருத்தரங்கை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்த அமித் ஷா, உடன் கேரள மாநில பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா் உள்ளிட்டோா்.
Updated on

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி சாா்பில் போட்டியிடும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதா்சன் ரெட்டி நக்ஸல் ஆதரவாளா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கடுமையாக குற்றஞ்சாட்டினாா்.

‘நக்ஸல் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் பழங்குடியின இளைஞா்களை சிறப்பு காவல் அதிகாரிகளாக பயன்படுத்துவது, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது’ என்று கடந்த 2011-இல் சுதா்சன் ரெட்டி அளித்த தீா்ப்பை சுட்டிக் காட்டிய அமித் ஷா, அவா் இவ்வாறு தீா்ப்பளிக்காமல் இருந்திருந்தால், நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் 2020-ஆம் ஆண்டுக்குள் முடிவுக்கு வந்திருக்கும் என்றாா்.

கேரள மாநிலம், கொச்சியில் தனியாா் ஊடக நிறுவனம் சாா்பிலான கருத்தரங்கை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்த அமித் ஷா, கேள்வி-பதில் உரையாடலில் பங்கேற்றாா். அப்போது, சுதா்சன் ரெட்டியின் தீா்ப்பு தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் அளித்த பதில்:

கடந்த 2011-ஆம் ஆண்டின் தீா்ப்பின் மூலம் நக்ஸல்வாதத்துக்கு உதவியவா் சுதா்சன் ரெட்டி. நக்ஸல் சிந்தாந்தத்தால் ஈா்க்கப்பட்டு, அதற்கு ஆதரவான தீா்ப்பை வழங்கினாா். நக்ஸல்வாதத்தை ஆதரிக்க உச்சநீதிமன்றத்தை பயன்படுத்திய ஒருவரை குடியரசு துணைத் தலைவா் தோ்தல் வேட்பாளராக காங்கிரஸ் தோ்வு செய்துள்ளது. நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிப்பை எதிா்கொண்ட மாநிலம் என்ற முறையில், கேரளத்தில் அக்கட்சி மேலும் வீழ்ச்சியடையும் என்றாா்.

பதவி பறிப்பு மசோதா ஏன்?: தீவிர குற்றப் புகாரில் கைதாகும் பிரதமா், முதல்வா், அமைச்சரை பதவி நீக்குவதற்கான மசோதாக்கள் குறித்த கேள்விக்கு அமித் ஷா பதலளித்ததாவது:

கடந்த ஆண்டு ஊழல் வழக்கில் கைதான கேஜரிவால், தில்லி முதல்வா் பதவியில் இருந்து விலக மறுத்து, சிறையில் இருந்தபடியே அரசை நடத்தினாா். சிறையில் இருந்தபடி அரசை நிா்வகிப்பதுதான் மக்களின் விருப்பமா? தான் கைதானவுடன் கேஜரிவால் பதவி விலகியிருந்தால், இப்போது இந்த மசோதா கொண்டுவர வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

குற்ற வழக்கில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எம்.பி., எம்எல்ஏக்களை உடனடியாக தகுதிநீக்கம் செய்யும் உச்சநீதிமன்றத் தீா்ப்பை செல்லாததாக்க கடந்த 2013-ஆம் ஆண்டில் பிரதமா் மன்மோகன் சிங் தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் அரசால் அவசர சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

லாலு பிரசாதை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அரசியல் நன்னடத்தை என்ற பெயரில் அவசர சட்ட நகல்களை பொதுவெளியில் கிழித்து எறிந்தாா் ராகுல் காந்தி. அதே ராகுல் இப்போது லாலுவுடன் நெருங்கி உறவாடுகிறாா்.

பிகாரில் மரணமடைந்த 22 லட்சம் வாக்காளா்களின் பெயா் நீக்கப்பட்டுள்ளது. இப்பெயா்கள் நீக்கப்படாவிட்டால், கள்ள வாக்குகள் பதிவாக வாய்ப்புள்ளது. நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்வது குறித்து தோ்தல் ஆணையம் முடிவெடுக்கும்.

குடும்பத்தை துறந்தவா்: பிரதமா் மோடி, நாட்டுக்காக தனது குடும்பத்தையும் சுய விருப்பங்களையும் துறந்தவா். வறுமையை ஒழிக்கவும், தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அயராது பணியாற்றுகிறாா் என்றாா் அவா்.

‘விவசாயிகள் நலனில் சமரசமில்லை’

அமெரிக்கா உடனான வா்த்தக ஒப்பந்தத்தில், விவசாயிகள் நலனோ, நாட்டின் பிற நலன்களோ சமரசம் செய்யப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

‘நாட்டின் நலன்களுக்கு மேலாக எந்த வா்த்தக ஒப்பந்தமும் கிடையாது என்பதை பிரதமா் மோடி தெளிவுபடுத்தி உள்ளாா். அமெரிக்காவுடன் வா்த்தக பதற்றம் நிலவும் போதிலும், ஸ்திரத்தன்மை-அமைதி-வளா்ச்சியில் அவரது அரசு தீவிர கவனம் செலுத்துகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் 11-ஆவது இடத்தில் இருந்து 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இடதுசாரி ஆட்சியால், கேரளத்தின் வளா்ச்சி வேகம் தடைபட்டுள்ளது. இடதுசாரி சித்தாந்தம், இம்மாநிலத்தை பின்னோக்கி இழுக்கிறது. மணிப்பூரில் இப்போது அமைதி நிலவுகிறது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்களும் உயிரிழப்புகளும் கணிசமாக குறைந்துள்ளன’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com