
தில்லியில் தெரு நாய்களை காப்பகத்துக்கு அனுப்பத் தேவையில்லை என்றும் தடுப்பூசி மற்றும் கருத்தடைக்குப் பிறகு அவற்றை பிடித்த இடத்தில் விட்டுவிட வேண்டும் என்று உச்சநீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு கூறியுள்ளது.
அதேநேரத்தில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட அல்லது ஆக்ரோஷமான தெருநாய்களை காப்பகங்களில் வைத்து பராமரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
தில்லியில் நாய்க் கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதை, தாமாக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், தில்லி - என்.சி.ஆா். பகுதியில் அனைத்து தெரு நாய்களையும் நிரந்தரமாக காப்பங்களுக்கு இடமாற்றம் செய்ய கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி உத்தரவிட்டது.
நீதிபதிகள் ஜே.பி. பா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு, தலைநகர் தில்லியில் எட்டு வாரங்களுக்குள் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் அடைத்துப் பராமரிக்கவும் குறைந்தது 5,000 நாய்களைக் கொண்ட ஆரம்பக் காப்பகங்களை நிறுவவும் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நடவடிக்கையைத் தடுக்கும் எந்தவொரு அமைப்பாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. விலங்கு நல அமைப்புகள் போராட்டம் மேற்கொண்டதுடன் உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தன.
இந்த விவகாரத்தை அவசர வழக்காகக் கருதி விசாரணைக்குப் பட்டியலிட கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், பரிசீலிப்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் 3 நீதிபதிகள் அமா்வு விசாரணைக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டாா்.
அதன்படி மேல்முறையீட்டு வழக்கு இன்று(வெள்ளிக்கிழமை) நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில், ஆக. 11 ஆம் தேதி இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில் மாற்றம் மட்டும் செய்வதாகக் கூறியது.
அதன்படி, நாய்களுக்கு தடுப்பூசி செலுத்திய பிறகு மற்றும் கருத்தடை செய்த பிறகு அவற்றை பிடித்த இடத்தில் விட்டுவிடவும் ரேபிஸ் போன்ற நோய்களை ஏற்படுத்தக்கூடிய நாய்களை மட்டும் காப்பகங்களில் அடைக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் "நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க அனுமதிக்கப்படாது, தெருநாய்களுக்கு உணவளிக்க பிரத்யேக இடங்கள் உருவாக்கப்பட வேண்டும். இதுபோன்று பொது இடங்களில் உணவு வழங்கும்போது பல அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே நாய்களுக்கு உணவு வழங்க தில்லி மாநகராட்சி இடங்களைத் தேர்வு செய்து கொடுக்க வேண்டும். மற்ற இடங்களில் அனுமதி இல்லை.
அரசு ஊழியர்கள் தங்கள் கடமையைச் செய்வதற்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாது. இடையூறு ஏற்பட்டால் புகார் அளிக்க தில்லி மாநகராட்சி, அவசர உதவி எண்ணை உருவாக்கி அறிவிக்க வேண்டும். மேலும் இடையூறு ஏற்படுத்துபவர்கள் ரூ. 25,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். விலங்கு ஆர்வலர்கள், தில்லி மாநகராட்சி மூலமாக நாய்களைத் தத்தெடுக்கலாம்.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இந்தப் பிரச்னையை கையாள்வதற்கான தேசியக் கொள்கையை உருவாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்" என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.