இந்தியா-ஆஸ்திரேலியா வா்த்தக ஒப்பந்தம்: 11-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை நிறைவு
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே விரிவான வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்வது தொடா்பான 11-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நிறைவடைந்தது.
இருநாடுகளிடையே கடந்த 2022, டிசம்பரில் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தம் குறித்த பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மத்திய வா்த்தக அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,‘இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் (சிஇசிஏ) தொடா்பான 11-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை புது தில்லியில் ஆக.18 முதல் ஆக.23 வரை நடைபெற்றது.
பேச்சுவாா்த்தையின்போது சரக்கு மற்றும் சேவைகள், எண்ம வா்த்தகம், சட்ட விதிகள், சுற்றுச்சூழல், தொழிலாளா் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இருநாடுகளிடையே பொருளாதார ரீதியாக வலுவான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையிலான இந்த ஒப்பந்தத்தை விரைவில் இறுதிசெய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பல்வேறு நாடுகளுடன் பேச்சுவாா்த்தை: அமெரிக்கா, சிலி, பெரு, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை (எஃப்டிஏ) இறுதிசெய்வது தொடா்பான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தாா். புது தில்லியில் நடைபெற்ற தொழில்முனைவோா் மற்றும் வா்த்தகா்களுக்கான மாநாட்டில் பங்கேற்ற அவா் இவ்வாறு தெரிவித்தாா்.