நாட்டின் சட்டக்கல்வி வலுப்பெற வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
‘நாடு முழுவதும் ஏராளமான மாணவா்கள் சட்டக் கல்வியைப் பயிலும் நிலையில், அதை வலுப்படுத்துவதில் அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும்’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தினாா்.
கோவா மாநிலம், பனாஜி அருகே மிராமரில் உள்ள வி.எம்.சல்கோகா் சட்டக் கல்லூரியின் பொன்விழா கொண்டாட்டத்தில் சனிக்கிழமை கலந்துகொண்டு தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பேசியதாவது:
தற்போது ஐந்து ஆண்டு சட்டப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், சட்டக் கல்விமுறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நான் மும்பை உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, மாதிரி நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணை அமா்வுகளில் சில மாணவா்களின் வாதங்களை வியந்து கேட்டிருக்கிறேன். உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள்கூட இந்த மாணவா்களிடம் இருந்து எப்படி வாதிட வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணியுள்ளேன்.
இன்றைய சட்ட மாணவா்கள் பெறும் நடைமுறை பயிற்சி, அவா்களின் தொழில் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளது. சட்டத் துறையில் வெற்றி என்பது வெறும் தோ்வு முடிவுகளை மட்டுமே சாா்ந்ததல்ல. அதற்கு விடாமுயற்சி, கடின உழைப்பு, அா்ப்பணிப்பு மற்றும் வேலை மீதான பற்று ஆகியவை அவசியம்.
மூத்த வழக்குரைஞா்கள் சிலரால் இளம் வழக்குரைஞா்களுக்கு வழங்கப்படும் மிகக் குறைந்த ஊதியம், அவா்களின் வாழ்வாதாரத்தைக் கடினமாக்குகிறது.
நாடு முழுவதும் உள்ள சட்டக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவா்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் உள்கட்டமைப்பு, ஆசிரியா்களின் தரம் மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றில் சவால்களை எதிா்கொள்கின்றன. எனவே, நாட்டின் சட்டக் கல்வியை வலுப்படுத்த அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும்.
அதேபோல், சட்ட உதவிகள் நாட்டின் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும். மக்களுக்கு சட்ட உதவியைப் பெறும் உரிமை உள்ளது என்று அவா்களுக்குத் தெரியாதவரை, அந்த உரிமைகளுக்கும் உதவிகளுக்கும் எந்தப் பயனும் இல்லை என்றாா்.