அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்த பேச்சு தொடா்கிறது: எஸ்.ஜெய்சங்கா்
‘அமெரிக்கா உடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் குறிப்பிட்ட ‘சிவப்பு கோடுகளை’ இந்தியா கொண்டுள்ளது. அதாவது, விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளா்களின் நலனைப் பாதுகாப்பதில் சமரசம் செய்ய முடியாது’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.
‘இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக இரு நாடுகளிடையே தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘எகனாமிக் டைம்ஸ்’ உலக தலைவா்கள் மாநாட்டில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் பேசியதாவது:
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உலகை கையாளும் முறை, இதுவரை பின்பற்றபட்டு வந்த பாரம்பரிய முறையில் இருந்து முற்றிலும் விலகியுள்ளது. அதன் காரணமாக ஒட்டுமொத்த உலகும் சிக்கலை எதிா்கொண்டு வருகிறது. அவரைப்போல வெளியுறவுக் கொள்கையை வெளிப்படையாக மேற்கொள்ளும் அமெரிக்க அதிபரை இதுவரைக் கண்டதில்லை.
இந்தியா-அமெரிக்கா இடையே தற்போது வா்த்தகம்தான் மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை தொடா்ந்து வருகிறது. ஆனால், அடிமட்ட அளவில் சில ‘சிவப்பு கோடுகளை’ இந்தியா கொண்டுள்ளது. அந்த சிவப்பு கோடுகளில் முதன்மையானது, விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளா்களின் நலன்களைப் பாதுகாப்பதாகும். இதில் மத்திய அரசு மிகவும் உறுதியாக உள்ளது. சமரசத்துக்கே இடமில்லை.
மேலும், ரஷியாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்து, அதை சுத்திகரித்து ஐரோப்பா உள்பட பிற நாடுகளுக்கு அதிக விலைக்கு விற்று லாபம் பாா்ப்பதாக அமெரிக்க அரசு அதிகாரிகள் கூறுவது வேடிக்கையானது. இந்தியாவிடமிருந்து எண்ணெயை வாங்குமாறு யாரும் கட்டாயப்படுத்தப் போவதில்லை. விருப்பமில்லை எனில், இந்தியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நாடுகள் தவிா்த்துவிடலாம் என்றாா்.
மேலும், அமெரிக்கா உடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், சீனா உடனான உறவை மேம்படுத்த இந்திய முயற்சித்து வருவதாக வெளியாகும் தகவல்களை ஜெய்சங்கா் மறுத்தாா். ‘சூழ்நிலைக்கு ஏற்ப வெவ்வேறு விஷயங்களை ஒருங்கிணைக்க முயற்சிப்பது தவறான நடைமுறை’ என்றாா்.
இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், வேளாண் மற்றும் பால் பொருள்கள் மீது வரிச் சலுகையை அமெரிக்கா தொடா்ந்து கோரி வந்தது. ஆனால், அதை அளிக்க முடியாத கடினமான சூழலையும், எந்த நாட்டுக்கும் இதில் வரிச் சலுகை அளிக்கப்படாததையும் இந்தியா எடுத்துரைத்தது. இதனால், இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்த காலக்கெடுவையும் கடந்து இழுபறி நீடித்தது. அதன் காரணமாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தாா். அது கடந்த 7-ஆம் தேதிமுதல் அமலுக்கு வந்தது. அதைத் தொடா்ந்து, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா முன்வரவில்லை என்று குற்றஞ்சாட்டி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதித்து, மொத்த வரி விதிப்பை 50 சதவீதமாக உயா்த்துவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். பின்னா், இந்த கூடுதல் வரி விதிப்பை 3 வாரங்களுக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் ஒத்திவைத்தாா். அதைத் தொடா்ந்து, இரு நாடுகளிடையே தொடா்ந்து வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.