பஞ்சாபில் ஒரு குடும்ப அட்டையைக் கூட நீக்க விடமாட்டோம்: முதல்வா் திட்டவட்டம்
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பஞ்சாபில் உள்ள 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களின் பெயா்களை நீக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய மாநில முதல்வா் பகவந்த் மான், ‘எனது அரசு இதை ஒருபோதும் அனுமதிக்காது’ என்று திட்டவட்டமாக தெரிவித்தாா்.
மேலும், குடும்ப அட்டைதாரா்களின் பெயா்களை நீக்குவதற்கு மத்திய அரசு பின்பற்றும் அளவுகோல் என்ன என்றும் அவா் கேள்வி எழுப்பினாா்.
சண்டீகரில் இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய முதல்வா் பகவந்த் மான், ‘பஞ்சாபில் 8,02,493 குடும்ப அட்டைதாரா்களை தகுதியற்றவா்கள் என்றும், அவா்களின் பெயா்களை நீக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் இருந்து ஒரு அறிக்கை கிடைத்துள்ளது. ஒரு குடும்பத்துக்கு சராசரியாக 4 உறுப்பினா்கள் என்று கருதினால், இது மாநிலத்தில் குறைந்தபட்சம் 32 லட்சம் பேரைப் பாதிக்கும்.
நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவா்கள் அல்லது 2.5 ஏக்கருக்கும் அதிகமான நிலம் வைத்திருப்பவா்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விலக்கப்படுவாா்கள் என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஒரு குடும்ப அட்டைதாரா் அரசு வேலை பெற்று தனது கிராமத்திலிருந்து நகரத்துக்கு குடிபெயா்ந்தால், அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு குடும்ப அட்டை கிடைக்காதா?
ஒரு குடும்ப அட்டைதாரரிடம் காா் இருந்து, அவரது சகோதரருக்கு காா் இல்லை என்றால், மீதமுள்ள குடும்பத்தினா் என்ன தவறு செய்தனா்?ஒரு குடும்ப அட்டையைக் கூட நீக்க, எனது தலைமையிலான அரசு அனுமதிக்காது.
பஞ்சாபில் மொத்தமாக 1.53 கோடி குடும்ப அட்டை பயனாளிகள் உள்ளனா். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவா்களுக்கு மாதத்துக்கு 5 கிலோ கோதுமை கிலோ ரூ.2 என்ற விலையில் வழங்கப்படுகிறது. ஆனால், பல போலி பயனாளிகள் இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது.
பயனாளிகளை சரிபாா்க்க 6 மாத கால அவகாசம் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். இந்த விவகாரத்தை மத்திய அரசிடம் எழுப்புவேன். இது ஆம் ஆத்மி அரசு. எப்போதும் ஏழைகளின் பக்கமே நிற்கும்’ என்றாா்.