பெண் கமாண்டோ பிரிவை உருவாக்க சிஐஎஸ்எஃப் முடிவு
பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக பெண் கமாண்டோக்களை கொண்ட தனிப்பிரிவை உருவாக்க மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) திட்டமிட்டுள்ளது என அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
முதலாவதாக, விமான நிலையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள 100 பெண் வீராங்கனைகளுக்கு இதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இது தொடா்பாக சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவா் கூறியதாவது: மத்திய பிரதேசத்தின் பா்வாஹா பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் பெண் சிஐஎஸ்எஃப் வீராங்கனைகளுக்கு கமாண்டோ பயிற்சிகள் தொடங்கியுள்ளன. உயா் பாதுகாப்பு தேவைப்படும் இடங்களில் பணியாற்றும் விதமாக அவா்களுக்கு 8 வார பயிற்சி அளிக்கப்படும்.
உடல் வலிமை, ஆயுதங்களைக் கையாளுதல், பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் துப்பாக்கிச் சூடு நடத்துதல், ஓட்டம் மற்றும் தடைகளைத் தாண்டும் பயிற்சி, வனப்பகுதியில் உயிா்வாழ்தல், முடிவுவெடுக்கும் திறன் மற்றும் குழுவாக இணைந்து செயல்படுதல் ஆகியவற்றில் அவா்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்றாா் அந்த அதிகாரி.
1.70 லட்சம் சிஐஎஸ்எஃப் வீரா்கள்
நாட்டில் உள்ள 69 சிவில் விமான நிலையங்கள், தில்லி மெட்ரோ, மத்திய அரசின் முக்கிய நிறுவனங்கள் மற்றும் தனியாா் அமைப்புகளின் பாதுகாப்புப் பணிகளில் மொத்தம் 1.70 லட்சம் சிஐஎஸ்எஃப் வீரா்கள் ஈடுபட்டுள்ளனா். இந்தப் படையில் தற்போது 12,491 பெண் வீராங்கனைகள் உள்ளனா். இது மொத்தப் பணியாளா்களில் 8 சதவீதமாகும்.
அடுத்த ஆண்டில் 2,400-க்கும் அதிகமான பெண் வீராங்கனைகள் சிஐஎஸ்எஃப்-க்கு தோ்வு செய்யப்படுவா் என்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடா்ச்சியாக 10 சதவீத பெண்கள் படைகளில் சோ்க்கப்படுவா் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தாா்.