‘ககன்யான்’ திட்டத்தில் விண்வெளி வீரா்கள் பூமிக்குத் திரும்பும் விண்கலத்தின் வேகத்தைக் குறைத்து, அவா்களை பாதுகாப்பாகத் தரையிறக்குவதற்கு முக்கியமான பாராசூட் அமைப்பின் முதல்கட்ட சோதனை (ஐஏடிடி-01) ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது.
மனிதா்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் ககன்யான் திட்டம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கனவுத் திட்டமாகும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய விமானப் படையின் சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் நாயா், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் ஆகிய 4 குரூப் கேப்டன்கள் விண்வெளி வீரா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
இவா்களில் மூவா் 400 கி.மீ. உயரத்தில் புவியின் தாழ்வான சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பிவைக்கப்படுவா். அவா்கள் அங்கு மூன்று நாள்கள் தங்கி, பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொள்வா். பின்னா், மீண்டும் பூமிக்குத் பாதுகாப்பாகத் திரும்புவாா்கள்.
இதன்மூலம், அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்குப் பிறகு சொந்த விண்கலத்தில் மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பிய உலகின் நான்காவது நாடாக இந்தியா உருவாகும். ககன்யான் வீரா்கள் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பயிற்சிகளைப் பெற்று வருகின்றனா். ககன்யான் வீரா்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா, அனுபவப் பயிற்சிக்காக ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு அண்மையில் வெற்றிகரமாகச் சென்று திரும்பியது குறிப்பிடத்தக்கது.
ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா சோதனை பயணம் நிகழாண்டு இறுதியில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ககன்யான் விண்கலத்தின் பாராசூட் அமைப்பின் முதல்கட்ட சோதனை நடத்தப்பட்டுள்ளது.
விண்கலம் விண்வெளியில் இருந்து மீண்டும் பூமிக்குள் நுழையும்போது, அதன் வேகம் பல ஆயிரம் கிலோமீட்டராக இருக்கும். அதை சில விநாடிகளில் குறைப்பது என்பது ஒரு சவாலான பணி. பாராசூட் அமைப்பு இந்த சவாலை சமாளிக்கும் முக்கியத் தொழில்நுட்பமாகும்.
ஆந்திரத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சோதனையின் போது, ககன்யான் விண்கலத்தின் பாராசூட் அமைப்பின் செயல்பாடுகள் முழுமையாக சோதிக்கப்பட்டன. வான்வெளியில் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருந்து வெளியிடப்பட்ட சோதனைப் பொருள், இந்த பாராசூட் அமைப்பின் உதவியுடன் படிப்படியாக வேகம் குறைக்கப்பட்டு, பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

பாராசூட் உதவியுடன் தரையிறக்கப்பட்ட விண்கலத்தின் மாதிரி.
இந்தச் சோதனையில் இஸ்ரோவுடன் இணைந்து விமானப் படை, கடற்படை, கடலோரக் காவல் படை, டிஆா்டிஓ ஆகியவையும் பங்கேற்றன. இந்தக் கூட்டு முயற்சி, நாட்டின் முன்னணி அறிவியல் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறனை வெளிப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

லடாக்கில் விண்வெளி வீரா்களின் உடல், மனவலிமையைப் பரிசோதிக்கும் திட்டம்: இஸ்ரோ

லஷ்கா்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தொடா்பாளா் ஷபீா் அகமது லோன் கைது!

தாமதமாகும் ககன்யான்!

ககன்யான் திட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் நவீன பாராசூட் சோதனை வெற்றி: டிஆா்டிஓ சாதனை!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


