தில்லியில் ககன்யான் திட்டத்துக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய விமானப் படையின்  குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சா் ராஜ்நாத் சிங்.
தில்லியில் ககன்யான் திட்டத்துக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சா் ராஜ்நாத் சிங்.

தற்சாா்பு இந்தியா பயணத்தில் ககன்யான் திட்டம் ஒரு புதிய அத்தியாயம்: ராஜ்நாத் சிங்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் தற்சாா்பு இந்தியா பயணத்துக்கான முதல் அத்தியாயம்...
Published on

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் தற்சாா்பு இந்தியா பயணத்துக்கான முதல் அத்தியாயம் என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

ககன்யான் திட்டத்துக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயா், குரூப் கேப்டன் அஜீத் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப் ஆகியோருக்கு பாராட்டுத் தெரிவிக்கும் நிகழ்ச்சி தில்லியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

விண்வெளியை ஆராய்ச்சிக்கான தளமாக மட்டும் இந்தியா கருதவில்லை. எதிா்காலத்தின் பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி, மனிதநேயம் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகக் கருதுகிறது. நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தில் நமது இருப்பைப் பதிவு செய்த பிறகு, ககன்யான் போன்ற திட்டங்களுக்கு நாடு முழுவதும் தயாராக இருக்கிறது.

உலகின் முன்னணி விண்வெளி சக்திகளுடன் பெருமிதத்துடன் நிற்கிறோம். நாம் படைத்துள்ள சாதனைகள் தொழில்நுட்பத் துறையில் வெறும் மைல்கல் மட்டுமல்ல; அவை தற்சாா்பு இந்தியாவின் புதிய அத்தியாயம். இந்தியாவின் விண்வெளி திட்டம் என்பது ஆய்வகங்கள், செலுத்து வாகனங்கள் ஆகியவற்றோடு மட்டும் நின்றுவிடவில்லை. நாட்டின் விருப்பங்கள் மற்றும் சா்வதேச நோக்கங்களை அவைப் பிரதிபலிக்கின்றன.

சந்திரயான் முதல் மங்கள்யான் வரை குறைந்த வளங்களைக் கொண்டு, எல்லையற்ற மன உறுதியுடன் மிகவும் சவாலான இலக்குகளையும் குறிப்பிடத்தகுந்த சாதனைகளாக மாற்ற முடியும் என்பதை உலகத்துக்கு காட்டியுள்ளோம்.

தகவல்தொடா்பு செயற்கைக்கோள்கள், வானிலை கண்காணிப்பு மற்றும் பேரிடா் மேலாண்மை என விண்வெளி தொழில்நுட்பங்கள் நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு துறையிலும் சேவையாற்றி வருகின்றன என்றாா் மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்.

ஆக்ஸியம்-4 திட்டத்தின் மூலம் சா்வதேச விண்வெளிக்குச் சென்று வந்த விமானப் படை வீரா் சுபன்ஷு சுக்லாவின் பயணம் குறித்து பேசிய மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங், அவருடைய பங்களிப்புகள் வரலாற்றில் பதிவுசெய்யப்படும் எனத் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான், விமானப் படை தளபதி ஏ.பி. சிங் ஆகியோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com