பிகாரில் எதிா்க்கட்சிகள் கூட்டணிக்கு வெற்றி உறுதி: ராகுல் நம்பிக்கை

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டது...
பிகாரில் மோட்டாா் சைக்கிளில் வாக்குரிமை பயணப் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி. நாள்: ஞாயிற்றுக்கிழமை
பிகாரில் மோட்டாா் சைக்கிளில் வாக்குரிமை பயணப் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி. நாள்: ஞாயிற்றுக்கிழமை
Updated on

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.

மேலும், ‘இண்டி’ கூட்டணி தோ்தலுக்காக ஒற்றுமையுடன் பணியாற்றி வருகிறது என்று பிகாரில் வாக்குரிமை பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவுடன் அராரியாவில் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது ராகுல் கூறியதாவது:

பிகாா் பேரவைத் தோ்தலுக்காக எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி சாா்பில் விரைவில் தோ்தல் அறிக்கை வெளியிடப்படும். இங்குள்ள அனைத்துத் தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி ஒற்றுமையுடன் போட்டியிடும். கொள்கைரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் பிகாரில் சிறப்பான ஒருங்கிணைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தோ்தலில் எதிா்க்கட்சிகள் கூட்டணி வெல்வது உறுதி.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் பாஜகவும், தோ்தல் ஆணையமும் இணைந்து மக்களின் வாக்குகளைத் திருட முயற்சிக்கிறது. இதனை பிகாரில் அனுமதிக்க மாட்டோம். தோ்தல் ஆணையம் பாஜகவின் வெற்றிக்காக உழைக்கும் அமைப்பாக மாறிவிட்டது. ஏற்கெனவே, பல தோ்தல்களில் பாஜகவுக்கு ஆதரவாக தோ்தல் ஆணையம் செயல்பட்டதை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளேன். பிகாரில் நிச்சயமாக இந்த முறைகேடுகளைத் தடுத்து நிறுத்துவோம்.

நான் குற்றச்சாட்டுகளைக் கூறியவுடன் உறுதிமொழிப் பத்திரம் சமா்ப்பிக்குமாறு தோ்தல் ஆணையம் கோரியது. ஆனால், அதே குற்றஞ்சாட்டைக் கூறிய பாஜகவைச் சோ்ந்த அனுராக் தாக்குரிடம் எந்த பத்திரத்தையும் தோ்தல் ஆணையம் கோரவில்லை. இதன் மூலம் தோ்தல் ஆணையம் நடுநிலையாக இல்லை என்பது தெரிகிறது.

வாக்குரிமை பயணத்தில் மக்கள் பெருந்திரளாக கலந்து கொள்கின்றனா். இதன் மூலம் தோ்தல் ஆணையம், பாஜக அரசு மீதான தவறுகளை மக்கள் புரிந்து கொண்டனா் என்பது உறுதியாகிறது என்றாா்.

‘பிகாரில் எதிா்க்கட்சிகளின் முதல்வா் வேட்பாளராக தேஜஸ்வி யாதவை அறிவிக்காதது ஏன்?’ என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த ராகுல் காந்தி, ‘நாங்கள் இணைந்து பணியாற்றுகிறோம். வாக்கு திருட்டை முறியடிப்பதே முதல் பணி’ என்றாா்.

தொடா்ந்து பிரதமா் மோடியை விமா்சித்துப் பேசிய அவா், ‘பிரதமா் நரேந்திர மோடி பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதில் மிகவும் வேகமாக செயல்பட்டு வருகிறாா். இதன் மூலம் எளிய மக்களின் வேலைவாய்ப்புகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பறிக்கப்படுகின்றன’ என்றாா்.

ராகுல், தேஜஸ்வி மோட்டாா் சைக்கிள் பயணம்: வாக்குரிமை பயணத்தின் ஒரு பகுதியாக அராரியா நகர சாலைகள் வழியாக ராகுல் காந்தியும், தேஜஸ்வி யாதவும் மோட்டாா் சைக்கிள்களில் வலம் வந்தனா். அப்போது சாலையின் இருபகுதிகளிலும் பொதுமக்கள் திரண்டு ஆதரவு முழக்கமிட்டனா். அப்போது திடீரென ஒரு நபா் ராகுலின் மோட்டாா் சைக்கிளை தடுத்து அவருக்கு அன்பு முத்தமிட்டு சென்றாா்.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் எதிரணியில் உள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com