

கிஷ்த்வார் வெள்ளப்பெருக்கில் காயமடைந்தவர்களிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை உடல்நலம் விசாரித்தார்.
இதற்காக தில்லியில் இருந்து விமானம் மூலம் ஜம்மு வந்தடைந்த அவர், ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 பேரை சந்திக்க நேரடியாக மருத்துவமனைக்குச் சென்றார். பின்னர் அவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல்நிலை குறித்து ராஜ்நாத் சிங்கிடம் மருத்துவ குழு விளக்கியதாக அதிகாரிகள் கூறினர்.
அப்போது ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உடன் இருந்தார். பின்னர் ராஜ்நாத் சிங் ராஜ் பவனுக்குச் சென்றுவிட்டு தில்லி திரும்ப உள்ளார். முன்னதாக மச்சில் மாதா கோயில் செல்லும் வழியில் உள்ள கடைசி கிராமமான சிசோட்டிக்கு ராஜ்நாத் சிங் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் மோசமான வானிலை காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிஷ்த்வார் மாவட்டத்தில், கடந்த ஆக.14 ஆம் தேதி, மாலை ஏற்பட்ட மேகவெடிப்பினால், திடீரென வெள்ளம் ஏற்பட்டு ஏராளமான குடியிருப்புகள் நீருக்குள் மூழ்கின. இந்த சம்பவத்தில் 65 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் 32 பேர் காணாமல் போன நிலையில், அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.