
வரதட்சிணைக் கேட்டு தனது மகளை உயிருடன் எரித்துக் கொன்றவர்களை என்கவுன்டரில் சுட வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.
மாமியார் வீட்டில் எந்தவித உதவியும் செய்யவில்லை என்றும், தனியாக பார்லர் நடத்தியே தனது பேரனை தனது மகள் வளர்த்து வந்ததாகவும் தந்தை கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் வரதட்சிணை கொடுமையால் நிக்கி என்ற 26 வயது பெண் ஆசிட் வீசி தீயிட்டு கொல்லப்பட்டுள்ளார். ரூ. 36 லட்சம் வரதட்சிணை வாங்கிவரக் கூறி கணவரும் மாமியாரும் சேர்ந்து தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றி உயிருடன் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
இதில், தீக்காயங்களுடன் அவர் தனது வீட்டு வாசலில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும்போது, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த கொடூரமான சம்பவங்கள் அனைத்தும் நிக்கியின் 6 வயது மகனின் கண் முன்பே நடந்துள்ளது.
நொய்டாவிலுள்ள கசானா பகுதியில் உள்ள விபின் என்பவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளார் நிக்கி. 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளார். இதோடு மட்டுமின்றி நிக்கியின் மூத்த சகோதரி காஞ்சன் என்பவரும் இதே குடும்பத்தில் மருமகளாக உள்ளார். அவர் விபினின் சகோதரர் ரோஹித்தை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
சம்பவத்தன்று, நிக்கியை கடுமையாகத் தாக்கி, அவர் மீது எளிதில் தீப்பற்றக்கூடிய திரவத்தை ஊற்றி, அவரின் கணவர் தீவைத்துள்ளார். இக்கொடூர சம்பவத்தை காஞ்சன் விடியோ பதிவு செய்துள்ளார். காஞ்சன் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விபினை கைது செய்துள்ளனர். தலைமறைவான குடும்ப உறுப்பினர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நிக்கியின் தந்தை அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது,
எனது மகள் அதிகமாக தனது புகுந்த வீட்டைப் பற்றி எங்களிடம் பேசுவதில்லை. எங்களுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது என என் மகள் நினைப்பவள். அதனால், திருமண வாழ்வில் அவள் தன்னால் முயன்ற அனைத்தையும் சுயமாகவே செய்துகொண்டாள். தற்போது அவளை அவர்கள் கொன்றுள்ளனர். அவர்கள் கொலையாளிகள். அவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை என்கவுன்டரில் சுட உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், விபினுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாகவும், அதற்கு இடையூறாக எனது மகள் இருப்பதால், அவளைக் கொன்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இது குறித்து நிலைகுலைந்திருந்த நிக்கியின் தாயார் பேசுகையில், என் மகளைக் கொன்றவரையும் அவரின் தாயாரையும் தூக்கிலிட வேண்டும். எனது மகள் அதிகப்படியான வலியை அனுபவித்து இறந்துள்ளார் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.