
பாஜக தலைமையிலான மத்திய அரசு மாநிலத்தில் 55 லட்ச மக்களுக்கு இலவச ரேஷனை நிறுத்தச் சதி செய்வதாக பஞ்சாப் முதல்வர் பகந்த் மான் குற்றம் சாட்டினார்.
பஞ்சாப் மக்களுக்கு எழுதிய எழுத்துப்பூர்வ செய்தியில், மாநிலத்தில் 55 லட்சம் மக்களுக்கு இலவச ரேஷனை நிறுத்துவதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மக்களின் ரேஷனை நிறுத்தியதாக ஒரு வாரத்திற்குள் முதல்வர் குற்றம் சாட்டுவது இது இரண்டாவது முறையாகும்.
இருப்பினும், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஏற்கெனவே முதல்வரின் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, பஞ்சாப் அரசு பொய்களைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுவரை, பஞ்சாபில் 1.53 கோடி மக்கள் ரேஷன் பெற்று வந்தனர், ஆனால் பாஜக அரசு 55 லட்சம் பேருக்கு இந்த வசதியை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளது. மூன்று ஏழைக் குடும்பங்களில் ஒன்றுக்கு ரேஷன் மறுக்கப்படுகிறது.
இது வெறும் அரசாங்க முடிவு மட்டுமல்ல, பஞ்சாபின் ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சாதாரண குடும்பங்களின் மீதான நேரடித் தாக்குதல்.
மத்திய அரசு ஜூலை முதல் பஞ்சாபின் 23 லட்சம் ஏழை மக்கள் தங்கள் தகவல்களைப் புதுப்பிக்கவில்லை என்று அவர்களுக்கு ரேஷன் வழங்குவதை நிறுத்தியுள்ளது. செப்டம்பர் முதல் சுமார் 32 லட்சம் பஞ்சாபியர் ஏழைகள் இல்லை என்று கூறி அவர்களுக்கு ரேஷன் வழங்குவதை பாஜக நிறுத்தப் போகிறது. மொத்தம் 55 லட்சம் ஏழைகளின் ரேஷன் வழங்குவதை நிறுத்தப் பாஜக திட்டமிட்டுள்ளது என்று அவர் கூறினார்.
பஞ்சாப் மக்களாகிய நாங்கள் உணவு தானியங்களைப் பயிரிட்டு முழு நாட்டிற்கும் உணவளிக்கிறோம். ஆனால் அதே பஞ்சாபின் மக்களுக்கு மத்திய அரசு உணவளிக்க மறுக்கிறது. இது நியாயமா?" என்று அவர் கூறினார்.
ஒரு வீட்டில் ஒருவர் வேலை செய்தால் அல்லது கார் வைத்திருந்தால், முழு குடும்பமும் பணக்காரர்களாக மாறுமா? இதனால் முழு குடும்பத்தின் (ரேஷன்) அட்டைகளையும் நிறுத்துவது சரியா? என்று அவர் கேள்வி எழுப்பினார்,
பஞ்சாபின் யதார்த்தத்தை பாஜக புரிந்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், தில்லியில் ஏசி அறைகளில் அமர்ந்திருக்கும்போது, கிராமங்களின் ஏழை மக்களின் உணவின் கணக்கு வைக்கப்படுகிறது என்றார். பாஜக பஞ்சாபை பழிவாங்க விரும்புகிறது. பயப்பட வேண்டாம் உங்கள் சகோதரர் பகவந்த் மான் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார், மக்கள் பீதி அடைய வேண்டாம். யாருடைய ரேஷன் கார்டும் தகுதி நீக்கம் செய்யப்படாது என்று முதல்வர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.