
ஹிமாசலில் பெய்து வரும் கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மொத்தம் 12 மாவட்டங்களில் 4 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.
தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட மொத்தம் 484 சாலைகள் மூடப்பட்டுள்ளன. இவற்றில், மண்டி மாவட்டத்தில் 245 சாலைகளும், அருகிலுள்ள குலுவில் 102 சாலைகளும் அடங்கும். பிலாஸ்பூர், ஹமீர்பூர், உனா மற்றும் சோலன் மாவட்டங்களில் குடியிருப்பு நிறுவனங்கள் தவிர, கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே மாநிலத்தின் இரண்டு முதல் ஏழு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் ஆகஸ்ட் 30 வரை கனமழை பெய்யும் என்று உள்ளூர் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகாரிகள் கூறுகையில், மாநிலத்தில் மொத்தம் 941 மின் விநியோக மின்மாற்றிகள் மற்றும் 95 நீர் வழங்கல் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பருவமழை தொடங்கிய ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 24 வரை, மாநிலத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 155 பேர் பலியாகியுள்ளனர். 37 பேர் காணாமல் போயுள்ளனர் என்று மாநில அவசரகால செயல்பாட்டு மையம் கூறியுள்ளது. இதுவரை 77 திடீர் வெள்ளங்கள், 40 மேக வெடிப்புகள் மற்றும் 79 பெரிய நிலச்சரிவுகளை மாநிலம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை தொடர்பான சம்பவங்களில் ஹிமாச்சலப் பிரதேசம் ரூ.2,348 கோடி அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளது என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.