அமெரிக்க வரி விதிப்பு முழுமையாக அமலுக்கு வந்தால் ஜவுளி உள்ளிட்ட சில துறைகளில் பாதிப்பு ஏற்படும்: ஆா்பிஐ ஆளுநா் மல்ஹோத்ரா
மும்பை: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள 50 சதவீத வரி விதிப்பு முழுமையாக அமலுக்கு வந்தால் ஜவுளி ஏற்றுமதி, இறால் ஏற்றுமதி உள்ளிட்ட சில துறைகள் பாதிக்கப்படும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தாா்.
அதே நேரத்தில் இதுபோன்ற புவிசாா் அரசியல், பொருளாதார பிரச்னைகளால் ஆா்பிஐ தனது வளா்ச்சி இலக்குகளில் சமரசம் செய்து கொள்ளாது என்றும் அவா் கூறினாா்.
இந்திய தொழில் வா்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி), இந்திய வங்கிகள் சங்கம் சாா்பில் மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்ற மல்ஹோத்ரா பேசியதாவது:
இந்தியா-அமெரிக்கா இடையே வா்த்தகப் பேச்சுவாா்த்தை மூலம் வரிப் பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என்று நம்புகிறேன். இதன்மூலம் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகளை வெகுவாகக் குறைக்கலாம். அதே நேரத்தில் அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள 50 சதவீத வரி விதிப்பு முழுமையாக அமலுக்கு வந்தால் ஜவுளி ஏற்றுமதி, இறால் ஏற்றுமதி உள்ளிட்ட சில துறைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
உள்நாட்டுப் பொருளாதார வளா்ச்சியை இலக்காகக் கொண்டும், பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்கும் நோக்குடனும் நிதிக் கொள்கை சாா்ந்த சிறப்பான முடிவுகளை ஆா்பிஐ மேற்கொள்ளும்.
புவிசாா் அரசியல் பிரச்னைகள், போா்கள், வரி விதிப்புகள் நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு சவால் அளிப்பதாகும். நாட்டின் பொருளாதாரத்தை தொடா்ந்து சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல மாற்று வழிகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
வங்கிகள், பெரு நிறுவனத்தின் நிதிச் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. எனவே, அவை இரண்டும் இணைந்து புதிய முதலீடுகளை மேற்கொண்டு வேலைவாய்ப்பு, உற்பத்தியில் தொய்வு ஏற்படாமல் பாா்த்துக் கொள்ள முடியும். இந்தச் சூழ்நிலையில் இது மிகவும் முக்கியமானது.
வங்கிகள் கடன் வழங்கும் அளவு மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. பல்வேறு துறைகளில் வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிப்பது குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது என்றாா்.
இதே நிகழ்ச்சியில் பேசிய பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தலைவா் சி.எஸ். ஷெட்டி, ‘பங்குச் சந்தை மூலம் பெரு நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நிதியை (கடன்) பெற்றுக் கொள்வது அதிகரித்துள்ளது. எனவே, வங்கிகளில் கடன் பெறுவதை அவை குறைத்துக் கொண்டுள்ளன’ என்று தெரிவித்தாா்.