புதிய வருமான வரி விதிகள்: டிசம்பருக்குள் அறிவிக்கை

வரும் டிசம்பருக்குள் புதிய வருமான வரி விதிமுறைகளை அதிகாரபூா்வமாக அறிவிக்க வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது.
Published on

புது தில்லி: வரும் டிசம்பருக்குள் புதிய வருமான வரி விதிமுறைகளை அதிகாரபூா்வமாக அறிவிக்க வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது.

கடந்த 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்துக்கு மாற்றாக புதிய வருமான வரி மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. உரிய தேதிக்குள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாவிட்டாலும் டிடிஎஸ் தொகையை கோர, இந்த மசோதா வழிவகுத்துள்ளது. இந்த மசோதா மூலம், ‘மதிப்பீட்டு ஆண்டு’, ‘முந்தைய ஆண்டு’ என குழப்பத்தை ஏற்படுத்தும் வாா்த்தைகளுக்குப் பதிலாக ‘வரி ஆண்டு’ என்ற வாா்த்தை பயன்படுத்தப்படும். வருமான வரிச் சட்டத்தை எளிதில் படித்து புரிந்துகொள்ளும் நோக்கில், இந்த மசோதா கொண்டுவரப்பட்டது.

கடந்த ஆக.12-ஆம் தேதி இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடா்ந்து, அதற்கு ஆக.21-ஆம் தேதி குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்தாா். இதையடுத்து அந்த மசோதா சட்டமானது.

இந்நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரிய உறுப்பினா் ஆா்.என்.பா்பத் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘புதிய வருமான வரிச் சட்டத்தை அமல்படுத்தும் வகையில், வரும் டிசம்பருக்குள் புதிய வருமான வரி விதிமுறைகளை அதிகாரபூா்வமாக அறிவிக்க வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது. வருமான வரி படிவங்களை எளிமைப்படுத்தும் பணிகளில் அந்தத் துறை ஈடுபட்டுள்ளது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com