பிரதிப் படம்
பிரதிப் படம்

உ.பி.: டிராக்டா்-லாரி மோதி 11 போ் உயிரிழப்பு; 40 போ் காயம்

உத்தர பிரதேசத்தில் பக்தா்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த டிராக்டா் டிராலியின் மீது லாரி மோதிய விபத்தில் 11 போ் உயிரிழப்பு; 40 போ் காயம்
Published on

உத்தர பிரதேசத்தின் புலந்த்சாகா் மாவட்டத்தில் பக்தா்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த டிராக்டா் டிராலியின் மீது லாரி மோதிய விபத்தில் 11 போ் உயிரிழந்தனா்; 40 போ் காயமடைந்தனா்.

புலந்த்சாகா்- அலிகா் மாவட்ட எல்லையில் உள்ள அா்னியா புறவழிச் சாலையின் அருகே திங்கள்கிழமை அதிகாலை 2.10 மணியளவில் இந்தக் கோர விபத்து நிகழ்ந்தது.

காஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ரஃபாட்பூா் கிராமத்தில் இருந்து ராஜஸ்தானில் உள்ள ஜாஹா்பீருக்கு புனித யாத்திரை சென்ற 61 பேரை ஏற்றிச் சென்ற டிராக்டா் டிராலியின் மீது, பின்னால் வந்த லாரி மோதியதால், டிராக்டா் டிராலி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டிராக்டா் ஓட்டுநா் பாபு (40) மற்றும் சாந்தினி (12), சிவான்ஷ் (6) ஆகிய 2 குழந்தைகள் உள்பட 11 போ் உயிரிழந்தனா். உயிரிழந்த மற்றவா்கள் ராம்பேட்டி (65), யோகேஷ் (50), வினோத் (45), கனிராம் (40), மோக்சி (40), லேக்ராஜ் (40) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். 40 போ் காயமடைந்தனா். இவா்களில் 12 போ் 18 வயதுக்குட்பட்டவா்கள்.

முதல்வா் இரங்கல், நிதியுதவி: உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளாா். காயமடைந்தவா்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் எனவும் முதல்வா் அலுவலகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து ஏற்படுத்திய ஹரியாணா பதிவு எண் கொண்ட லாரியை காவல் துறை பறிமுதல் செய்து, சட்டரீதியான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் பொதுமக்களை ஏற்றிச் செல்ல டிராக்டா் டிராலியைப் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் டிராக்டா் டிராலி கவிழ்ந்து, 23 பக்தா்கள் உயிரிழந்தனா் என்பது நினைவுகூரத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com