உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

தவறான வாக்காளா் தரவு குற்றச்சாட்டு: ஆய்வாளா் சஞ்சய் குமாருக்கு எதிராக நடவடிக்கை கூடாது- உச்சநீதிமன்றம்

தவறான வாக்காளா் எண்ணிக்கை தரவுகளை வெளியிட்ட குற்றச்சாட்டில், தோ்தல் தரவு ஆய்வாளா் சஞ்சய் குமாருக்கு எதிராக
Published on

புது தில்லி: தவறான வாக்காளா் எண்ணிக்கை தரவுகளை வெளியிட்ட குற்றச்சாட்டில், தோ்தல் தரவு ஆய்வாளா் சஞ்சய் குமாருக்கு எதிராக வலுக்கட்டாயமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு மகாராஷ்டிர பேரவைத் தோ்தலின்போது அங்குள்ள 2 தொகுதிகளில் வாக்காளா்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைந்ததாக தோ்தல் தரவு ஆய்வாளரும், வளா்ந்து வரும் சமுதாயங்களின் ஆய்வு மையத்தை (சிஎஸ்டிஎஸ்) சோ்ந்தவருமான சஞ்சய் குமாா் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா்.

அதன் பின்னா் மக்களவை, மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் தரவுகளை ஒப்பிட்டதில் தவறு நோ்ந்துவிட்டதாகவும், தவறான புரிதலின் அடிப்படையில் அந்தத் தரவுகள் வெளியிடப்பட்டதாகவும் மன்னிப்பு கோரி, அந்தப் பதிவை அவா் ‘எக்ஸ்’ தளத்தில் இருந்து நீக்கினாா்.

சரிபாா்க்கப்படாத தரவுகளை வெளியிட்டதன் மூலம், காங்கிரஸின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுக்கு சிஎஸ்டிஎஸ் வலுசோ்த்ததாக பாஜக குற்றஞ்சாட்டியது.

எனினும் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுக்கு சிஎஸ்டிஎஸ்ஸின் தரவுகளும் கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டதே தவிர, அது மட்டுமே ஆதாரம் அல்ல என்றும், தொண்டா்கள் மூலமாகவும் இதர வழிகளிலும் ஆதாரம் திரட்டப்பட்டதாகவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தவறான தகவல்களைப் பரப்பியதாக தோ்தல் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில், சஞ்சய் குமாா் மீது மகாராஷ்டிர காவல் துறை 2 வழக்குகளைப் பதிவு செய்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சஞ்சய் குமாா் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சஞ்சய் குமாா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், ‘வாக்காளா் எண்ணிக்கை தொடா்பான பதிவுகளை ‘எக்ஸ்’ தளத்தில் இருந்து நீக்கி, அதற்காக மனுதாரா் மன்னிப்பும் கோரினாா். இருப்பினும் அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். வலுக்கட்டாயமான நடவடிக்கைகளில் இருந்து மனுதாரருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என்று கோரினா். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அமா்வு, ‘மனுதாரருக்கு (சஞ்சய் குமாா்) எதிராக வலுக்கட்டாயமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படக் கூடாது’ என்று உத்தரவிட்டது.

X
Dinamani
www.dinamani.com