பாகிஸ்தானைச் சோ்ந்த கிறிஸ்தவருக்கு இந்தியக் குடியுரிமை
பனாஜி: பாகிஸ்தானில் பிறந்த கிறிஸ்தவரான பிரெண்டன் வெலன்டைன் கிரேஸ்டோ (44), 19 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு இந்தியக் குடியுரிமை பெற்றாா். பனாஜியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவா முதல்வா் பிரமோத் சாவத் குடியுரிமைக்கான சான்றிதழை அவருக்கு வழங்கினாா்.
பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து இன்னல்களால் பாதிக்கப்பட்டு 2014 டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் தேடி வந்தோருக்கு குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-இன் கீழ் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி பிரெண்டன் இந்தியக் குடியுரிமை பெற்றுள்ளாா்.
இதன் மூலம் கோவாவில் இச்சட்டத்தின்கீழ் மூன்றாவது நபருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த பிரெண்டன், இந்தியப் பெண்ணான மொ்லின் பொ்னாண்டோவை 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டாா். 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய குடிமகனாகியுள்ளாா்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜோசப் பிரான்சிஸ் பெரேரா (78) என்ற பாகிஸ்தானில் பிறந்த நபருக்கு முதல்முறையாக கோவாவில் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.