ஜம்மு-காஷ்மீரில் கடும் வெள்ளம்: 13 பேர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் கடும் வெள்ளம்: 13 பேர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழை, வெள்ளம், நிலச்சரிவால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Published on

ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழை, வெள்ளம், நிலச்சரிவால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட விபரீத சம்பவங்கள் மற்றும் நிலச்சரிவால் 13 பேர் உயிரிழந்தனர்; 21 பேர் காயமடைந்தனர்.

கடந்த திங்கள்கிழமை முதல் ஜம்முவில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள ரியாஸி, ரஜௌரி, ரம்பன், கிஷ்த்வார், பூஞ்ச் மாவட்டங்களில் உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன.

இந்த சம்பவங்களால் டோடா மாவட்டத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அவர்களில் மூவர் ஆற்றில் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்தனர். வீடு இடிந்து ஒருவர் உயிரிழந்தார். ஏராளமான வீடுகள், பாலங்கள் சேதமடைந்தன.

மழை, வெள்ளம் குறித்து ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

நிலச்சரிவில் 9 பேர் உயிரிழப்பு: வைஷ்ணவ தேவி கோயிலுக்கு யாத்திரை செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்; 21 பேர் காயமடைந்தனர். நிலச்சரிவில் மேலும் பலர் சிக்கியிருக்கக் கூடும் என்று கருதப்படுவதால், உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அதிகபட்சமாக கதுவா மாவட்டத்தில் 155.6 மி.மி. மழைப் பதிவானது. டோடா மாவட்டத்தில் உள்ள பதேர்வாவில் 99.8 மி.மீ., ஜம்முவில் 81.5 மி.மீ., கத்ராவில் 68.8 மி.மீ. மழைப்பொழிவு பதிவானது.

யாத்திரை ரத்து: பலத்த மழையை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைஷ்ணவ தேவி கோயில் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவை கடுமையாக பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மழை, வெள்ள நிலவரம், வைஷ்ணவ தேவி கோயில் அருகே ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதல்வர் ஒமரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் கேட்டறிந்தார்.

X
Dinamani
www.dinamani.com