எஸ்சிஓ மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனம்: இந்தியா முன்னெடுப்பு

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வருடாந்திர உச்சி மாநாட்டு கூட்டறிக்கையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனத்தை உறுதிப்படுத்த பணியாற்றி வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
Published on
Updated on
1 min read

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வருடாந்திர உச்சி மாநாட்டு கூட்டறிக்கையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனத்தை உறுதிப்படுத்த பணியாற்றி வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஆக. 29 முதல் செப்டம்பர் 1-ஆம் தேதிவரை ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு 4 நாள்கள் பயணம் மேற்கொள்கிறார். பயணத்தின் முதல்கட்டமாக ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி, தொடர்ந்து சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க 2 நாள் (ஆக.31-செப்.1) பயணமாக சீனா செல்கிறார்.

இந்நிலையில், வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் மேற்கு பிரிவு செயலர் தன்மய லால் ஆகியோர் கூட்டாக தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, தன்மய லால் கூறுகையில், "பயங்கரவாதம், பிரிவினைவாதம், அடிப்படைவாதம் ஆகிய மூன்று தீமைகளை எதிர்கொள்வதே எஸ்சிஓ அமைப்பின் முக்கிய நோக்கம். இந்தக் கொள்கை இன்றும் ஒரு சவாலாக உள்ளது.

பிராந்தியத்தின் பாதுகாப்பு, உறுப்பு நாடுகளுக்குத் தொடர்ந்து முன்னுரிமையாக இருக்கிறது. கடந்த 2023-இல் இந்தியாவின் எஸ்சிஓ தலைமையின்போது, பயங்கரவாதம், அடிப்படைவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை எதிர்ப்பதற்கான ஒரு கூட்டறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இத்தகைய சூழலில், சீனாவில் நடைபெறவுள்ள எதிர்வரும் எஸ்சிஓ உச்சி மாநாட்டின் கூட்டறிக்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதில் பயங்கரவாதம், குறிப்பாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான வலுவான கண்டனத்தை இடம்பெற செய்ய மற்ற உறுப்பு நாடுகளுடன் இணைந்து இந்தியா பணியாற்றி வருகிறது' என்றார்.

எஸ்சிஓ உச்சி மாநாட்டுக்கிடையே, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ரஷிய அதிபர் புதினுடன் இருதரப்பு சந்திப்பு நடைபெறுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "பிரதமரின் சந்திப்பு அட்டவணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை' என்று விக்ரம் மிஸ்ரி பதிலளித்தார்.

இந்தியா, சீனா, ரஷியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய 10 உறுப்பு நாடுகளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கொண்டுள்ளது. அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம், சீனாவின் துறைமுக நகரான கிங்டாவோவில் கடந்த ஜூன் மாத இறுதியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் கூட்டறிக்கையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பான இந்தியாவின் கவலைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படாததால், அதில் கையொப்பமிட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுத்துவிட்டார். இதனால் அந்தக் கூட்டம் கூட்டறிக்கை வெளியிடப்படாமல் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com