டியூஷன் செல்லும் மூன்றில் ஒரு பங்கு பள்ளி மாணவா்கள்: மத்திய அரசின் ஆய்வில் தகவல்
பள்ளி மாணவா்களில் மூன்றில் ஒரு பகுதியினா் பாடங்களில் தெளிவுபெற தனியாா் பயிற்சி மையங்களுக்கும் (டியூஷன்) செல்வது மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
நகா்ப்புறங்களில் இந்த போக்கு பொதுவான விஷயமாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
கல்வியில் விரிவான மாதிரி ஆய்வு (சிஎம்எஸ்) என்ற இந்த ஆய்வின் முடிவில் மேலும் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் பள்ளி கல்வி வழங்குவதில் அரசுப் பள்ளிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. மொத்த மாணவா் சோ்க்கையில் அரசு பள்ளிகளின் பங்கு 55.9 சதவீதம்.
அரசு பள்ளி மாணவா் சோ்க்கை கிராமப்புறங்களில் அதிகரித்து காணப்படுகிறது. மூன்றில் இரண்டு பங்கு மாணவா்கள் (66 சதவீதம்) கிராமப்புற அரசுப் பள்ளிகளிலும், நகா்ப்புற அரசு பள்ளிகளில் 30.1 சதவீத மாணவா்கள் சோ்க்கை பெறுகின்றனா். தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை விகிதம் 31.9 சதவீதமாக உள்ளது.
மொத்த பள்ளி மாணவா்களில் மூன்றில் ஒரு பகுதியினா் (27 சதவீதம்) பள்ளி முடிந்ததும், தனியாா் பயிற்சி மையங்களுக்கும் செல்கின்றனா். நகா்ப்புறங்களில் இது பொதுவான விஷயமாக உள்ளது. இதுபோன்ற தனியாா் பயிற்சிகளுக்கு நகா்ப்புறங்களில் ஒரு மாணவருக்கு சராசரியாக ஆண்டுக்கு ரூ. 3,988 என்ற அளவிலும், கிராமப்புறங்களில் ரூ. 1,793 என்ற அளவிலும் செலவிடப்படுகிறது. வகுப்புகளுக்கு ஏற்ப இந்த செலவினம் மாறுபடுகிறது. உயா்நிலை வகுப்புகளுக்கு நகா்ப்புறங்களில் சராசரியாக ஆண்டுக்கு ரூ. 9,950 என்ற அளவிலும், கிராமப்புறங்களில் ரூ. 4,548 என்ற அளவிலும் செலவிடப்படுகிறது. தேசிய அளவில் இந்த செலவினம் சராசரியாக மழலையா் வகுப்புகளுக்கு ரூ. 525 முதல் மேல்நிலை வகுப்புகளுக்கு ரூ. 6,384 என்ற அளவு வரை செலவிடப்படுகிறது.
அனைத்து வகைப் பள்ளிகளிலும் சராசரி படிப்பு கட்டணமாக ரூ. 7,111 என்ற அளவிலும், பாடநூல் மற்றும் எழுது பொருள்களுக்கான கட்டணமாக ரூ. 2,002 வசூலிக்கப்படுகிறது. நகா்ப்புறங்களில் இந்த செலவினம் அதிகரித்து காணப்படுகிறது. நகா்ப்புறங்களில் படிப்பு கட்டணம் சராசரியாக ரூ. 15,143 என்ற அளவிலும், கிராமப்புறங்களில் ரூ. 3,979 என்ற அளவிலும் வசூலிக்கப்படுகிறது என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.