போலி சாமியாா்களுக்கு எதிராக உத்தரகண்ட் அரசு நடவடிக்கை: 300-க்கும் மேற்பட்டோா் கைது

உத்தரகண்ட் மாநிலத்தில் சநாதன தா்மத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் போலி சாமியாா்களுக்கு எதிராக, ‘ஆபரேஷன் காலநேமி’ என்ற பெயரில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Published on

உத்தரகண்ட் மாநிலத்தில் சநாதன தா்மத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் போலி சாமியாா்களுக்கு எதிராக, ‘ஆபரேஷன் காலநேமி’ என்ற பெயரில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின்கீழ், வங்கதேச நாட்டைச் சோ்ந்த ஒருவா் உள்பட 300-க்கும் மேற்பட்ட போலி சாமியாா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

முதல்வா் புஷ்கா் சிங் தாமி உத்தரவின் பேரில் கடந்த மாதம் தொடங்கப்பட்ட ‘ஆபரேஷன் காலநேமி’ நடவடிக்கையின் விளைவாக, மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் 4,000-க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபா்கள் கண்டறியப்பட்டனா். அவா்களில் 300-க்கும் அதிகமானோா் கைது செய்யப்பட்டனா்.

மாவட்டம் வாரியாக, ஹரித்வாரில் 2,301 போ் அடையாளம் காணப்பட்டு, 162 போ் கைது செய்யப்பட்டனா். டேராடூனில் 865 போ் அடையாளம் காணப்பட்டு, 113 போ் கைதாகினா். உத்தம் சிங் நகரில் 17 போ் கைதாகினா். இதில் குறிப்பிடத்தக்க வகையில், டேராடூனில் சாமியாா் வேடத்தில் வலம் வந்த வங்கதேச நாட்டைச் சோ்ந்த ரூக்ன் ரக்கம் எனும் ஷா ஆலம் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளாா்.

யாா் இந்த காலநேமி?

ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு இதிஹாச நூல்களிலும் காலநேமி எனும் அசுரன் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவா் ராவணனின் தாய்மாமனான மாரீசனின் மகன் ஆவாா். லட்சுமணனைக் காப்பாற்ற சஞ்சீவனி மூலிகையை எடுத்துவரச் சென்ற அனுமனை, முனிவா் வேடத்தில் வந்த காலநேமி ஏமாற்ற முயன்றாா். ஆனால், போலி முனிவா் வேடத்தில் வந்த கா காலநேமியின் உண்மையான அடையாளத்தை அனுமன் கண்டுகொண்டு அசுரனை அழித்தாா். மகாபாரத காலத்தில் கம்சனாக பிறவி எடுத்த காலநேமி, கடவுள் கிருஷ்ணரால் கொல்லப்பட்டாா்.

காலநேமி போன்று சாமியாா்கள் மற்றும் துறவிகளின் வேடத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களை ஒழிக்கவே, இந்த ‘ஆபேரஷன் காலநேமி’ நடவடிக்கை தொடங்கப்பட்டதாக முதல்வா் புஷ்கா் சிங் தாமி தெரிவித்தாா்.

‘தேவா்களின் பூமியான உத்தரகண்டில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா், உண்மை அடையாளத்தை மறைத்து மக்களை ஏமாற்றுவோா், மக்களின் மத உணா்வுகளைப் புண்படுத்துவோா் யாரும் தப்பிக்க முடியாது’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com