தனிநபர் தாக்குதல் தொடுப்பது ஆர்எஸ்எஸ் வழக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

"தனிநபர்கள் மீது விமர்சனத் தாக்குதல்களை நடத்துவது ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிமுறை. மகாத்மா காந்தி மீதும் அந்த அமைப்பு தனிநபர் விமர்சனத் தாக்குதலை நடத்தியது' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
ராகுல் காந்தி
ராகுல் காந்திPTI
Published on
Updated on
1 min read

"தனிநபர்கள் மீது விமர்சனத் தாக்குதல்களை நடத்துவது ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிமுறை. மகாத்மா காந்தி மீதும் அந்த அமைப்பு தனிநபர் விமர்சனத் தாக்குதலை நடத்தியது' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.

பிகாரில் மகா கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு பெற்ற வாக்குரிமை யாத்திரையை ஓர் இடைவேளைக்குப் பின் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கி வைத்தார். அந்த மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 17-ஆம் தேதிமுதல் இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, பிகாரில் மகா கூட்டணிக் கட்சிகளுடனான கலந்துரையாடலில் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றார். இது தொடர்பான விடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அந்த விடியோவில் பிகார் மாநிலம், அராரியா நகரில் உள்ள சாலையோர உணவகம் ஒன்றில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், சிபிஐ (எம்எல்) கட்சியின் தீபாங்கர் பட்டாச்சார்யா, விகாஸ்ஷீல் இன்சான் கட்சித் தலைவர் முகேஷ் சஹானி, மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி, பிகார் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோருடன் ராகுல் தேநீர் அருந்தும் காட்சி இடம்பெற்றுள்ளது.

அவர்களுடன் ராகுல் காந்தி பேசுகையில் "தனிநபர்கள் மீது விமர்சனத் தாக்குதல்களை நடத்துவது ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிமுறை.

மகாத்மா காந்தி மீதும் அந்த அமைப்பு தொடர்ந்து தனிநபர் விமர்சனத் தாக்குதல்களை நடத்தி வந்தது. அவர்மீது ஆர்எஸ்எஸ் எந்த அளவுக்கு அவதூறு பரப்பியது என்பதை மக்கள் நினைவில் கொள்ளவில்லை.

மகாத்மா காந்தியைப் பற்றி அந்த அமைப்பு தொடர்ந்து பொய்களைப் பரப்பிவந்தது' என்று தெரிவித்தார்.

பாஜக ஆட்சேபம்

பிகாரில் நடைபெறும் வாக்குரிமை யாத்திரையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்றதற்கு பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான் ஆட்சேபம் தெரிவித்தார். இது தொடர்பாக பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தர்மேந்திர பிரதான் "பிகாரின் மரபணு தாழ்ந்தது என்று ரேவந்த் ரெட்டி கடந்த காலங்களில் கருத்து தெரிவித்தார். அவரை பிகாரில் நடைபெறும் வாக்காளர் அதிகார யாத்திரையில் பங்கேற்க அழைத்ததற்காக ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

வாக்கு திருட்டு தொடர்பாக இண்டி கூட்டணிக் கட்சிகள் வதந்திகளைப் பரப்பி வருகின்றன. வாக்காளர் பட்டியலில் போலியாக இடம்பெற்றிருந்த லட்சக்கணக்கான பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. ரோஹிங்கயா அகதிகளுக்கும் வங்கதேசத்தவர்களுக்குமான சத்திரம் அல்ல இந்தியா' என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com