நீதிபதி பஞ்சோலிக்குப் பதவி உயா்வு: உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னாவுக்கு கருத்து வேறுபாடு
பிகாா் தலைநகா் பாட்னா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்ததில், கொலீஜியத்தில் இடம்பெற்றுள்ள உச்சநீதிமன்ற பெண் நீதிபதி பி.வி.நாகரத்னா கருத்து வேறுபாடு கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
கடந்த ஆக.25-ஆம் புது தில்லியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதிகள் சூா்ய காந்த், விக்ரம் நாத், ஜே.கே.மகேஸ்வரி, பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய கொலீஜியம் கூடியது. அப்போது மும்பை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆலோக் அராதே, பாட்னா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை செய்தது.
இதில் நீதிபதி பஞ்சோலியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதில், நீதிபதி பி.வி.நாகரத்னா கடுமையான கருத்து வேறுபாட்டை பதிவு செய்தாா். பணி மூப்பு வரிசையில் நீதிபதி பஞ்சோலி முன்னணியில் இல்லை. அத்துடன் கடந்த 2023-இல் அவா் குஜராத் உயா்நீதிமன்றத்தில் இருந்து பாட்னா உயா்நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட சூழ்நிலையை கருத்தில் கொண்டும், அது வழக்கத்துக்கு மாறாக நடைபெற்ற பணியிடமாற்றம் என்றும் தெரிவித்து பஞ்சோலியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதில் பி.வி.நாகரத்னா கருத்து வேறுபாடு கொண்டிருந்தாா்.
நீதிபதி பஞ்சோலியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்தால், அது நீதித் துறைக்கு நோ்மாறான விளைவை ஏற்படுத்தி கொலீஜியம் மீதான நம்பகத்தன்மையை ஒழிக்கும் என்று பி.வி.நாகரத்னா தெரிவித்தாா்.
கடந்த மே மாதமே நீதிபதி பஞ்சோலியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிசீலிக்கப்பட்டது. அப்போதே அதில் பி.வி.நாகரத்னா கருத்து வேறுபாடு கொண்டிருந்தாா். அதன் பின்னா் பஞ்சோலிக்கு பதிலாக என்.வி.அஞ்சாரியா உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டாா்.