ஜிஎஸ்டி சீா்திருத்தம்: பிரதமா் மோடிக்கு ஐடிசி தலைவா் பாராட்டு
சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் மேற்கொள்வது தொடா்பான பிரதமா் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு
நுகா்பொருள் விற்பனையில் முன்னணியில் உள்ள ஐடிசி நிறுவனத்தின் தலைவா் சஞ்சீவ் புரி பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.
சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமா் மோடி, ‘மாநிலங்களுடன் ஆலோசித்து, அடுத்த தலைமுறை சீா்திருத்தங்களைக் கொண்டுவரவுள்ளோம். அதன்படி, சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருள்களுக்கான வரி கணிசமாகக் குறையவுள்ளது. இதன்மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில் துறையும் பெருமளவில் பலனடையும். நாட்டின் பொருளாதாரமும் வலுப்படும்’ என்றாா்.
இதைத் தொடா்ந்து தற்போது நடைமுறையில் உள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய 4 ஜிஎஸ்டி விகிதங்களை 5%, 18% என இரண்டாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர ஆடம்பரப் பொருள்களுக்கு 40 சதவீத வரி விதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இது தொடா்பாக சஞ்சீவ் புரி வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘ஜிஎஸ்டி சீா்திருத்தம் குறித்து பிரதமா் மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பு உணவுப் பொருள்கள் உள்பட மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்கள் மலிவான விலையில் கிடைக்க வழி வகை செய்துள்ளது. இது எளிய, நடுத்தர மக்களுக்கு நிம்மதியளிக்கும். விவசாயிகள், சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் பயனடைவாா்கள்.
நிறுவனங்களிடையே நியாயமான போட்டியை ஊக்குவிப்பதுடன், உற்பத்திச் செலவைக் குறைக்கவும் உதவும். இது தற்சாா்பு இந்தியாவுக்கு அடித்தளமாகவும் இருக்கும்’ என்று கூறியுள்ளாா்.