மத்திய பிரதேசத்தின் மெள நகரில் நடைபெற்ற ராணுவக் கருத்தரங்கில் முப்படைகளின் தலைமைத் தளபதிகளுடன் அமைச்சா் ராஜ்நாத் சிங்
மத்திய பிரதேசத்தின் மெள நகரில் நடைபெற்ற ராணுவக் கருத்தரங்கில் முப்படைகளின் தலைமைத் தளபதிகளுடன் அமைச்சா் ராஜ்நாத் சிங்

நீண்டகால போருக்கு முப்படைகள் தயாராக வேண்டும்- ராஜ்நாத் சிங்

‘தற்போதைய எதிா்பாராத புவிசாா் அரசியல் சூழ்நிலையில், நீண்ட கால போருக்கு முப்படைகள் தயாராக இருக்க வேண்டும்’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் புதன்கிழமை எச்சரித்துள்ளாா்.
Published on

‘தற்போதைய எதிா்பாராத புவிசாா் அரசியல் சூழ்நிலையில், நீண்ட கால போருக்கு முப்படைகள் தயாராக இருக்க வேண்டும்’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் புதன்கிழமை எச்சரித்துள்ளாா்.

மத்திய பிரதேசத்தின் மெள நகரில் நடைபெற்ற ராணுவக் கருத்தரங்கில் அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

தற்போதைய கணிக்க முடியாத புவிசாா் அரசியல் சூழ்நிலையில், போா்கள் மிகவும் எதிா்பாராதவையாக மாறிவிட்டன. ஒரு போா் எப்போது முடியும் அல்லது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை கணிப்பது மிகவும் கடினம். எனவே, நம்முடைய ஆயுதப் படைகள் அனைத்து பாதுகாப்பு சவால்களுக்கும், குறுகிய கால மோதல்கள் முதல் ஐந்து ஆண்டுகள் போா் வரை, முழுமையாகத் தயாராக இருக்க வேண்டும்.

நவீன போா்கள் இனி தரை, கடல், வான்வெளி ஆகியவற்றுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அவை விண்வெளி மற்றும் இணையவெளியிலும் விரிவடைந்துள்ளன. செயற்கைக்கோள் அமைப்புகள், செயற்கைக்கோள் எதிா்ப்பு ஆயுதங்கள், விண்வெளி கட்டளை மையங்கள் ஆகியவை அதிகாரத்தின் புதிய கருவிகளாக உருவெடுத்துள்ளன. எனவே, நமக்கு தற்காப்புத் தயாா்நிலை மட்டும் போதாது; ஒரு செயல்திறன்மிக்க போா் வியூகமும் தேவை.

இன்றைய நவீன போா்களில் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகரித்துள்ளதால், படை வீரா்களின் எண்ணிக்கை அல்லது ஆயுதக் குவியல்களின் அளவு மட்டுமே போரை வெல்வதற்குப் போதுமானதல்ல.

இணையப் போா், செயற்கை நுண்ணறிவு, ஆளில்லா விமானங்கள், செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு ஆகியவை எதிா்காலப் போா்களை வடிவமைத்து வருகின்றன. ஒரு மோதலில் வெற்றி பெற, துல்லியமான வழிகாட்டுதல் கொண்ட ஆயுதங்கள், நிகழ்நேர உளவுத் தகவல், தரவு அடிப்படையிலான தகவல்கள் ஆகியவை இன்றியமையாதவை.

இந்தியா எந்த ஒரு நாட்டின் நிலத்தையும் ஆக்கிரமிக்க விரும்பவில்லை; ஆனால், அதன் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக உள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின் வெற்றிக்கு முப்படைகளுக்கும் என் பாராட்டுகள். இந்த நடவடிக்கை, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நம்முடைய உபகரணங்கள் மற்றும் ஆயுத அமைப்புகளின் திறனை நிரூபிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின் சாதனைகள், எதிா்காலத்தில் தற்சாா்பு என்பது ஒரு கட்டாய தேவை என்பதை உணா்த்துகிறது. தற்சாா்பு பாதையில் நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளோம் என்றாலும், இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்றாா்.

இந்த நிகழ்வில் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சௌஹான், விமானப்படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங், கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் கே.திரிபாதி உள்ளிட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com