
ஜம்மு - காஷ்மீரில் திடீரென பெய்த கனமழையால் புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பரிதாபமாக உயிழந்தனர்.
ஜம்மு - காஷ்மீரில் கிஷ்த்வர் மற்றும் தோடா மாவட்டங்களில் திடீரென பெய்த கனமழையால் திரிகூட மலையின் உச்சியில் உள்ள புனிதத் தலமான வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், இந்த நிலச்சரிவில் சிக்கிய பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தொடர் மழையால் ஜம்மு - காஷ்மீர் முழுவதும் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, குடியிருப்புகள் மற்றும் பல்வேறு கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
ஆற்றின் நடுவே இருந்த பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு, மின் கம்பங்கள் மற்றும் மொபைல் கோபுரங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
கனமழை காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு, தனியார் அலுவலகங்களையும் மூட ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது.
அடுத்த 40 மணி நேரத்திற்கு ஜம்முவில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், ஆற்றங்கரை மற்றும் வெள்ளம் ஏற்படும் பகுதிகளுக்குச் செல்வதை பொதுமக்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பசந்தர், தாவி மற்றும் செனாப் நதிகளின் நீர்மட்டம் தற்போது முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-ஸ்ரீநகர் மற்றும் கிஷ்த்வார் - தோடா தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜம்முவுக்குச் செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
கிஷ்த்வார், ரியாசி, ரஜோரி, ராம்பன் மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் பல கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உணவு, தண்ணீர் மற்றும் மருந்துப் பொருள்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை சரியான நேரத்தில் வழங்கவும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களை உடனடியாக வெளியேற்றவும் ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.
நிலச்சரிவில் சிக்கிய பகுதிகளில் இருந்து 3,500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், துணைப் பேரிடர் மீட்புப் படை, இந்திய ராணுவத்தினர் மற்றும் அங்குள்ள உள்ளூர் தன்னார்வலர்களும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.