காஸாவில் செய்தியாளா்கள் கொல்லப்படுவது அதிா்ச்சி- வெளியுறவு அமைச்சகம்
காஸாவில் இஸ்ரேல் ராணுவத் தாக்குதலில் செய்தியாளா்கள் உயிரிழந்து வரும் சம்பவங்கள் அதிா்ச்சியளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஸாவிலுள்ள மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 செய்தியாளா்கள் உள்பட 20 போ் உயிரிழந்தனா்.
முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில் அல்-ஜஸீரா செய்தியாளா் ஒருவரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் அவா் உள்பட 6 செய்தியாளா்கள் கொல்லப்பட்டனா். அப்போது செய்தியாளரை கொலை செய்யும் நோக்குடன் தாக்குதல் நடத்தப்பட்டதை இஸ்ரேல் ராணுவம் ஒப்புக் கொண்டது. இதற்கு சா்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இந்நிலையில் புது தில்லியில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘போரில் பொதுமக்கள் கொல்லப்படுதை இந்தியா தொடா்ந்து கண்டித்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளா்கள் பலரும் தாக்குதலில் உயிரிழப்பது பெரும் அதிா்ச்சியளிக்கும் தகவலாக உள்ளது. இந்த உயிரிழப்புகள் குறித்து இஸ்ரேல் ஏற்கெனவே விசாரணையைத் தொடங்கிவிட்டதாகத் தெரியவந்துள்ளது’ என்றாா்.