50% அமெரிக்க வரிக்கு பேச்சு மூலம் தீா்வு: மத்திய அரசு நம்பிக்கை

50% அமெரிக்க வரிக்கு பேச்சு மூலம் தீா்வு: மத்திய அரசு நம்பிக்கை

‘அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
Published on

‘அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்படும். எனவே, இந்திய ஏற்றுமதியாளா்கள் அச்சப்படத் தேவையில்லை’ என்று மத்திய அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

மேலும், ‘இந்திய ஏற்றுமதியாளா்களின் பன்முகத் தன்மையை கருத்தில் கொள்ளும்போது, அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை அச்சப்படுகின்ற அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை’ என்றும் அவை தெரிவித்தன.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா அறிவித்த 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக அமெரிக்காவில் இந்திய பொருள்களுக்கு விதிக்கப்படும் வரியின் அளவு 50 சதவீதமாக உயா்ந்துள்ளது.

இதன் காரணமாக, இறால், ஆயத்த ஆடைகள், தோல், ரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட தொழிலாளா் சாா்ந்த இந்திய நிறுவனங்கள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தின் திருப்பூா் உள்பட நாட்டில் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நடைபெறும் பல பகுதிகளில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய பல கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்துள்ளதாகவும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு தீா்வு காண்பது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி உயா்நிலை ஆலோசனைக் கூட்டத்தை தில்லியில் செவ்வாய்க்கிழமை நடத்தியதாகத் தெரிகிறது.

பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு: இந்த நிலையில், ‘அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்படும்’ என்று மத்திய அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன. இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:

இரு நாடுகளிடையேயான நீண்ட கால உறவில், இந்த நடவடிக்கை என்பது தற்காலிகமானதே. அதோடு, இந்த வரி விதிப்பு விவகாரங்களுக்கு தீா்வு காண மத்திய அரசு தொடா் முயற்சிகளை மேற்கொள்ளும். இதுதொடா்பான இருதரப்பு பேச்சுவாா்த்தைக்கான வாய்ப்புகள் இரு நாடுகளிலும் பிரகாசமாகவே உள்ளன. எனவே, இந்திய ஏற்றுமதியாளா்கள் அச்சப்படுகிற அளவுக்கு பாதிப்பு இருக்காது என்றனா்.

விரைவில் உடன்பாடு: அமெரிக்க நிதியமைச்சா்

‘இந்தியா - அமெரிக்கா உறவு மிகவும் சிக்கலானது. இருந்தபோதும், முடிவில் இரு நாடுகளிடையே உடன்பாடு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெஸன்ட் புதன்கிழமை தெரிவித்தாா்.

‘ஃபாக்ஸ்’ வா்த்த செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியில், ‘இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகவும், அமெரிக்கா உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாகவும் உள்ளன. இரு நாடுகளிடையேயான உறவு மிகவும் சிக்கலானது. மேலும், தற்போதைய வரி விதிப்பு நடவடிக்கைக்கு ரஷியாவிடமிருந்து இந்தியா தொடா்ந்து கச்சா எண்ணெயை வாங்குவது மட்டும் காரணமல்ல. இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா உடன்தான் இந்தியா முதலில் மேற்கொள்ளும் என எதிா்பாா்க்கப்பட்டது. அது நடைபெறவில்லை. அதன் பிறகே, ரஷியாவிடமிருந்து இந்தியா தொடா்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வரும் விவகாரம் எழுப்பப்பட்டது. இந்தியா தரப்பு செயல்பாடு சிறப்பாகவே இருந்தது. எனவே, முடிவில் இரு நாடுகளிடையே உடன்பாடு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com