
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி நிராகரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிப்பதாகக் கூறி, இந்தியா மீது 50 சதவிகித வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார்.
இந்த வரிவிதிப்பானது, இன்றுமுதல் (ஆகஸ்ட் 27) அமலுக்கு வருகிறது. வரிவிதிப்பின் காரணமாக நேற்றைய பங்குச்சந்தை சரிந்தே காணப்பட்டது.
இதனிடையே, டிரம்ப்பின் அழைப்பை பிரதமர் மோடி தொடர்ந்து நிராகரித்து வருவதாக ஜெர்மன் செய்தி ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த சில நாள்களில் பிரதமர் மோடியை 4 முறை டிரம்ப் தொடர்புகொள்ள முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், டிரம்ப்பின் அழைப்பை பிரதமர் மோடி நிராகரித்ததாக ஜெர்மன் செய்தி கூறுகிறது.
மேலும், இந்தியா மீதான வரிவிதிப்பால் கோபமுற்றதை பிரதமர் மோடி வெளிக்காட்டுவதாகக் குறிப்பிடுகிறது.
இதனிடையே, இந்தியா - பாகிஸ்தான் போரில் 1,314 கோடி மதிப்பிலான விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் தெரிவித்திருப்பது மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை அதிகாலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது, இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்தும் அந்நாட்டு அதிபர் டிரம்ப் பேசினார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், போரின்போது பிரதமர் மோடியிடம் `உங்களுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன பிரச்னை?’ என்று கேட்டேன். தொடர்ந்து, பாகிஸ்தானிடம் `உங்களுக்கும் இந்தியாவுக்கும் என்ன பிரச்னை?’ என்று கேட்டேன்.
இரு நாடுகளுக்கிடையேயான வெறுப்பானது, நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. நூற்றாண்டுகளாக வெவ்வேறு பெயர்களில் அது இருந்து வருகிறது.
உங்களுடன் (மோடி) வர்த்தகம் செய்ய விரும்பவில்லை என்று கூறினேன். அல்லது தலைசுற்றும் அளவுக்கு உங்கள் மீது அதிக வரி விதிக்கப் போகிறோம் என்று கூறினேன். நீங்கள் இருவரும் ஓர் அணு ஆயுதப் போருக்குக் காரணமாக இருக்கப் போறீர்கள் என்று கூறி, நாளை என்னை மீண்டும் அழைக்கவும் என்று கூறினேன். இருப்பினும், அடுத்த 5 மணிநேரத்திலேயே போர் முடிவுக்கு வந்தது.
அவர்களிடையே மீண்டும் போர் மூளலாம். அப்படி நடந்தால், அதையும் நான் தடுத்து நிறுத்துவேன். போரை நாம் அனுமதிக்கக் கூடாது. அது நல்லதல்ல.
போரில் நிறைய ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 150 மில்லியன் டாலர் மதிப்பிலான விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட விமானங்களாக இருக்கலாம். இருப்பினும், உண்மையான எண்ணிக்கையை அவர்கள் வெளியிடவில்லை.
ரஷியாவும் உக்ரைனும் உலகப் போருக்கு வழிவகுப்பது போல, இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போருக்கு வழிவகுக்கப் போகின்றன என்று தெரிவித்தார்.
போரை நிறுத்தியதாகத் தொடர்ந்து கூறிவரும் டிரம்ப்பின் பேச்சுக்கு மத்திய அரசும் தொடர்ந்து மறுப்பு தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இதையும் படிக்க: இந்தியா மீது 25% கூடுதல் வரி இன்று முதல் அமல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.