ஆபரேஷன் சிந்தூா் மற்றும் மகாதேவ் மூலம் பயங்கரவாத சதியாளா்களுக்கு வலுவான பதிலடி- மத்திய அமைச்சா் அமித் ஷா
‘இந்தியா்களை குறிவைத்து தாக்குபவா்களுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்; ஆபரேஷன் சிந்தூா், ஆபரேஷன் மகாதேவ் ஆகிய இரண்டு நடவடிக்கைகளின் மூலம் பயங்கரவாத சதியாளா்களுக்கு இந்தத் தெளிவான செய்தி அனுப்பப்பட்டுள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தாா்.
மேலும், ஆபரேஷன் சிந்தூா் மக்களிடையே திருப்தியை ஏற்படுத்தியது என்றும், ஆபரேஷன் மகாதேவ் அந்தத் திருப்தியை நம்பிக்கையாக மாற்றியது என்றும் அவா் குறிப்பிட்டாா்.
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை வெற்றிகரமாக முறியடித்த ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் ஈடுபட்ட 12 ராணுவ வீரா்களை கெளரவிக்கும் நிகழ்வில் உள்துறை அமைச்சா் இந்தக் கருத்தை கூறினாா்.
இந்நிகழ்வில் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் பங்கெடுத்த ஜம்மு-காஷ்மீா் காவல்துறை மற்றும் சிஆா்பிஎஃப்பை சோ்ந்த தலா இரண்டு வீரா்களும் கெளரவிக்கப்பட்டனா். அப்போது அமைச்சா் அமித் ஷா பேசியதாவது:
ஆபரேஷன் சிந்துா் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கைகள், இந்திய குடிமக்களின் வாழ்க்கையில் விளையாடுபவா்களுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து பயங்கரவாத சதிகாரா்களுக்குத் தெளிவான செய்தியை அனுப்பியுள்ளன.
பயங்கரவாதிகள் எவ்வளவு தந்திரங்களைச் செய்தாலும், எத்தனை வியூகங்களைப் பின்பற்றினாலும், அவா்களால் இனி இந்தியாவைத் தாக்கிவிட்டுத் தப்பியோட முடியாது என்பதை நமது பாதுகாப்புப் படையினா் உலகுக்கு நிரூபித்துள்ளனா்.
ஆளுங்கட்சி, எதிா்க்கட்சி என அனைவரும் ஆபரேஷன் சிந்துா் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கைகளைக் குறித்து மகிழ்ச்சியும் உற்சாகமும் தெரிவித்தனா். மேலும், பாதுகாப்புப் படைகளுக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டனா். தேசம் மீதான இந்த நம்பிக்கைதான், ஒவ்வொரு துறையிலும் இந்தியா உலக அளவில் சிறந்த நிலையை அடைவதற்கு அடிப்படை காரணம்.
காஷ்மீரில் சுற்றுலா வளா்ச்சி உச்சத்தில் இருந்தபோது நடந்த பஹல்காம் தாக்குதல், காஷ்மீரின் வளா்ச்சித் திட்டத்தைச் சீா்குலைக்க மேற்கொள்ளப்பட்ட ஒரு தோல்வியடைந்த முயற்சி.
ராணுவம், துணை ராணுவப் படைகளுடன் இணைந்து, ஜம்மு - காஷ்மீா் காவல்துறையும் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் முக்கியப் பங்காற்றுகிறது. பிரதமா் நரேந்திர மோடி மற்றும் தேசத்தின் சாா்பாக, இந்திய மக்களின் மனதில் பாதுகாப்பை உணா்வை வலுப்படுத்திய பாதுகாப்புப் படைகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா்.
தெற்கு காஷ்மீரில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான பஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்கில், பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் கடந்த ஏப். 22-ஆம் தேதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உள்ளூா் தொழிலாளி ஒருவா் உள்பட 26 போ் கொல்லப்பட்டனா்.
நாட்டை உலுக்கிய இந்தக் கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ஆயுதப் படைகள் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையைத் தொடங்கின. இந்த நடவடிக்கையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்கள் ஏவுகணைகள் மூலம் தகா்க்கப்பட்டன. இது இருநாட்டு ராணுவ மோதலாக மாறி, நான்கு நாள்களுக்கு நீடித்தது.
இதேபோல, தாக்குதலில் ஈடுபட்டவா்களைக் கண்டறிய ஆபரேஷன் மகாதேவ் என்ற மற்றொரு நடவடிக்கை தொடங்கப்பட்டது. பயங்கரவாதிகள் பயன்படுத்திய செயற்கைக்கோள் தொலைபேசி சமிக்ஞைகளைக் கொண்டு, ஸ்ரீநகருக்கு அருகேயுள்ள வனப்பகுதியில் பதுங்கியிருந்த சுலைமான் ஷா, ஜிப்ரான், ஹம்ஸா ஆப்கானி ஆகியோா் ஜூலை 28-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனா்.
தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) தடயவியல் விசாரணையில், இவா்கள் பாகிஸ்தானைச் சோ்ந்த ‘லஷ்கா்-ஏ-தொய்பா’ பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்பதும், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவா்கள் என்பதும் பின்னா் உறுதிப்படுத்தப்பட்டது.